PUBLISHED ON : ஜன 08, 2026 06:00 PM

கற்பனைக்கு எட்டாத அழகு, காதலின் சின்னம், உலக அதிசயங்களில் ஒன்று எனப் போற்றப்படும் தாஜ்மகால், பனிக்காலத்துக் காலையில் எப்படிக் காட்சியளிக்கும்.
ஆக்ராவின் கடும் குளிரிலும், யமுனை ஆற்றின் கரையோரம் ஒரு வெண்ணிற அதிசயம் பனிமூட்டத்திற்குள் மெல்லத் தலைதூக்குகிறது. குளிர்காலத்தின் இந்த அதிகாலைப் பொழுதுகளில் தாஜ்மகாலைப் பார்ப்பது என்பது வெறும் சுற்றுலா மட்டுமல்ல, அது ஒரு கவித்துவமான அனுபவம்.
பனிமூட்டம் சூழ்ந்த காலை வேளைகளில், தூரத்தில் இருந்து பார்க்கும்போது தாஜ்மகால் மேகங்களுக்கு நடுவே மிதப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைத் தரும். அருகில் செல்லச் செல்ல, அந்த வெண்பனித் திரையைக் கிழித்துக்கொண்டு பளிங்கு மாளிகை வெளிப்படும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
குளிர்காலத்தின் தெளிவான நிலவொளி இரவுகளில், தாஜ்மகாலைப் பார்ப்பது வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய ஒன்று. நிலவின் ஒளியில் அந்த வெண்பளிங்கு கற்கள் நீல நிறச் சாயலில் ஜொலிக்கும்.
ராஜஸ்தானின் மக்ரானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர வெண்பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இதிலுள்ள பூவேலைப்பாடுகள் 'பியட்ரா துரா' எனும் விலையுயர்ந்த கற்களைப் பதிக்கும் முறையில் செய்யப்பட்டவை.
குளிர்காலத்தில் தாஜ்மகாலைப் பார்க்கச் செல்பவர்கள் அதிகாலை 6:00 மணிக்கே சென்றுவிடுவது நல்லது. கூட்டம் குறைவாக இருக்கும் என்பதோடு, சூரிய உதயத்தின் அழகையும் ரசிக்கலாம்.
-எல்.முருகராஜ்

