PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

'துவக்கத்திலேயே, பவன் கல்யாண் விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் எனஎச்சரித்தோம்; அதை காது கொடுத்து கேட்கவில்லை. இப்போது கவலைப்பட்டு என்ன பயன்...' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றி கூறுகின்றனர், அவரது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், பா.ஜ.,வும், பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் அங்கம் வகிக்கின்றன.
கடந்த சட்டசபை தேர்தலில், பவன் கல்யாண் கட்சியும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தார், சந்திரபாபு நாயுடு. அப்போதே, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகள், சந்திரபாபு நாயுடுவை எச்சரித்தனர்.
'பவன் கல்யாண், விவகாரமான நபர்; நம்மை மீறி செயல்படுவார்...' என, அவர்கள் கூறினர். வெற்றி மயக்கத்தில் இருந்த சந்திரபாபு, அதை பொருட்படுத்தவில்லை.
இப்போது பவன் கல்யாண், ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். தனியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது, அரசின் திட்ட பணிகளை ஆய்வு செய்வது, மற்ற அமைச்சர்களின் துறைகளில் தலையிடுவது என, எல்லை மீறி வருகிறார்.
இதை பார்க்கும் சந்திரபாபு நாயுடு, 'பிள்ளை பூச்சியை மடியில் கட்டிய கதையாக போய் விடுமோ...' என, புலம்ப துவங்கியுள்ளார்.