PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

'எந்தெந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது...' என, மேற்கு வங்கத்தை சேர்ந்த, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரை பற்றி கோபத்துடன் பேசுகின்றனர், அங்குள்ள பா.ஜ.,வினர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் மம்தாவை கடுமையாக தாக்கிப் பேசும், பா.ஜ., தலைவர்களில் முன்னாள் எம்.பி.,யான திலீப் கோஷும் ஒருவர். தற்போது அவருக்கு, 61 வயதாகிறது.
இதுவரை திருமணம் செய்யாமல் இருந்த அவர், பா.ஜ., மகளிர் அணியைச் சேர்ந்த, ரிங்கு மஜும்தார் என்ற நிர்வாகியை சமீபத்தில் திருமணம் செய்தார்.
இதை கேள்விப்பட்ட திரிணமுல் கட்சியினர், 'திலீப் கோஷும், ரிங்கு மஜும்தாரும், கொல்கட்டாவில் உள்ள, 'எகோ பார்க்'கில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது தான் காதல் மலர்ந்தது. இந்த பார்க்கை துவக்கி வைத்தவர், எங்கள் தலைவி மம்தா தான்.
'ஒரு வகையில், திலீப் கோஷின் மண வாழ்க்கைக்கு எங்கள் தலைவியும் ஒரு காரணமாக இருந்துள்ளார். இதற்காக அவர், மம்தாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றனர்.
திரிணமுல் கட்சியினரின் இந்த பேச்சு, திலீப் கோஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பார்க்கில் மரத்தடியில் அமர்ந்து நாங்கள் காதல், 'டூயட்'டா பாடினோம்... கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் போது தான், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி திருமணம் செய்தோம். இது தெரியாமல், திரிணமுல் கட்சியினர் மோசமான வகையில் அரசியல் செய்கின்றனர்...' என, ஆவேசப்படுகிறார், திலீப் கோஷ்.