/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தொழில் முனைவோரை உருவாக்குவதே லட்சியம்!
/
தொழில் முனைவோரை உருவாக்குவதே லட்சியம்!
PUBLISHED ON : டிச 06, 2025 03:27 AM

திருப்பூரைச் சேர்ந்த வீடியோ எடிட்டர், விஷ்ணுப்பிரியன்: எனக்கு பூர்வீகம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம். கல்லுாரியில் பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். சிறு வயதில் இருந்தே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம்.
நான் எட்டாவது படிக்கும் போது, ஒருவரை ஓவியம் வரைந்து கொடுத்தேன். அதை பார்த்து மகிழ்ச்சியான அவர், 'இது, உன் உழைப்புக்கான கூலி'ன்னு சொல்லி, என் கையில், 500 ரூபாயை திணித்துவிட்டு சென்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படம் வரைந்தும் சம்பாதிக்க முடியும் என அன்று தான் தெரிந்தது.
அதன்பின், நண்பர்கள், உறவினர்கள் என, தெரிந்தவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க ஆரம்பித்தேன். என் அம்மாவும் நன்றாக வரைவார்; அவரிடம் இருந்து தான் இந்த திறமை எனக்கு வந்திருக்க வேண்டும்.
நான் சிறுவனாக இருந்த போதே அம்மாவும், அப்பாவும் பிரிந்து விட்டனர். என் அம்மா எட்டாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். அதனால், கிடைத்த வேலையை செய்து, என்னையும், அண்ணனையும் வளர்த்தார்.
வேலைக்கு சென்று, அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் பெரிய கனவாக இருந்தது. பிளஸ் 2 படிக்கும் போது, நான் வரைவதையே வீடியோ எடுத்து, 'எடிட்' செய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தேன்.
என், 'வீடியோ எடிட்டிங்'கை பார்த்து, பலரும் பாராட்ட ஆரம்பித்தனர். அவர்களின் வீடியோக்களை எடிட் செய்து தரும்படி பலர் குறுஞ்செய்தி அனுப்பினர். இதனால், வீடியோ எடிட்டிங்கையே வியாபாரமாக மாற்றிக் கொண்டேன். பிறகு, நானே வீடியோக்களை எடுக்கவும் ஆரம்பித்தேன்.
'கேமரா வாங்க வசதி இல்லையே' என, நினைக்க வேண்டாம். இப்போது, மொபைல் போனிலேயே திறன் மிக்க கேமராக்கள் உள்ளன. அதனால், போனிலேயே எல்லாம் செய்து விடலாம்.
படித்தபடியே வேலை செய்வது சிரமமாக உள்ளது. இருப்பினும், எங்கள் கல்லுாரியில் ஆசிரியர்களும், நண்பர்களும் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.
தற்போது, பகுதி நேர வேலையில், மாதம், 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் கல்லுாரி கட்டணத்தை, நானே செலுத்தி விடுகிறேன். அம்மாவை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறி, குடும்ப பொறுப்பை நானும், அண்ணனும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இது ஆரம்பம் தான்... ஒரு நிறுவனத்தை துவக்கி, பலருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்து, நிறைய தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்!

