PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

'இந்த காலத்தில், மூன்றாவது நபருக்கு தெரியாமல் எதுவுமே செய்ய முடியாது போலிருக்கிறது...' என கவலைப்படுகிறார், சிவசேனா உத்தவ் கட்சியின் எம்.பி.,யும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து, ஒரு பிரிவுக்கு, முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், மற்றொரு பிரிவுக்கு உத்தவ் தாக்கரேயும் தலைவர்களாக உள்ளனர்.
இந்த இரண்டு பிரிவினருமே, ஒருவர் மீது ஒருவர் அன்றாடம் குற்றச் சாட்டுகளை கூறுவது வழக்கமாக உள்ளது. ஒருவர் செய்யும் தவறை, மற்றொருவர் வெளிச்சம் போட்டுக் காட்டுவது, மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற உத்தவ் தாக்கரே, அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஆனால், அவருடன் வந்த சஞ்சய் ராவத், காருக்குள்ளேயே இருந்தார்; அதுவும், முந்திரி, பாதாம், பிஸ்கட் ஆகியவற்றை சாப்பிட்டபடி அமர்ந்திருந்தார்.
இதை வீடியோ எடுத்த எதிர் தரப்பினர், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 'மக்கள் வறட்சியால் அவதிப்படும்போது, சஞ்சய் ராவத், பாதாம், முந்திரிகளை சாப்பிடுகிறாரே...' என, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
சஞ்சய் ராவத்தோ, 'அரசியல் மிக மோசமான நிலைக்கு போய் விட்டது...' என, புலம்புகிறார்.