PUBLISHED ON : ஜன 04, 2026 02:16 AM

இலவச வலையில் சிக்கி விடாதீர்கள் மக்களே!
வி.எஸ்.ராமச்சந்திரன், செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் அறிக்கை தயாரிக்க, மக்களிடம் கருத்து கேட்க பிரத்யேக செயலியை, தி.மு.க., அறிமுகம் செய்துள்ளது. மறுபுறம், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீபாவளி பண்டிகைக்கு பட்டு வேட்டி - சேலை வழங்குவோம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரத்தின் போது அறிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை பெற என்னென்ன வாக்குறுதிகளை கொடுக்கலாம், இலவச திட்டங்களை அறிவிக்கலாம் என, பிரதான அரசியல் கட்சிகள் மூளையை கசக்கி கொண்டிருக்கின்றன.
இதில், ஆளுங்கட்சியோ, நடைமுறையில் உள்ள இலவச திட்டங்கள், ரொக்க பண உதவிகள் தனக்கு ஓட்டுகளாக மாறுமா என்ற கணக்கு போடுவதுடன், பொங்கல் பரிசு திட்டம் என்ற பெயரில், ஓட்டுகளை பெற, அரசு முத்திரையிட்ட கவருக்குள் எவ்வளவு ரொக்க பணம் வைக்கலாம் என்று யோசிக்கிறது.
ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு பணமாக இருந்தாலும், தேர்தலின் போது கவருக்குள் வைத்து கொடுக்கும் பணமாக இருந்தாலும், அவை எதுவும் அரசியல்வாதிகள் உழைத்து சேர்த்தது அல்ல; எல்லாமே மக்களின் வரிப்பணம்!
நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, முறைகேடாக குவித்து வைத்துள்ள பணம், தேர்தலின் போது, கவருக்குள் புகுந்து கைமாறுகிறது.
இப்பணமெல்லாம் அரசின் கருவூலத்தில் இருந்து, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பயன்பட்டிருக்க வேண்டியவை. ஆனால், சுயநல அரசியல்வாதிகளால் பதுக்கப்பட்டு, தேர்தலின் போது ஓட்டுகளை விலைக்கு வாங்க பயன்படுகிறது.
எனவே, ஓட்டுக்கு பணம் என்ற மாய வலைக்குள் சிக்கி விடாமல், எவரது தேர்தல் வாக்குறுதியில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, நீர்நிலை பாதுகாப்பு, மது விலக்கு, தரமான கல்வி, மருத்துவ வசதி போன்றவை இடம்பெற்றுள்ளனவோ, அக்கட்சிக்கு ஓட்டளிப்பது, நமக்குமட்டுமல்ல; நாட்டிற்கும் நன்மை பயக்கும்!
எது பயங்கரவாத அமைப்பு? எஸ்.சுப்பிரமணியன், சென் னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கமும், பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவும் ஒரே கொள்கை கொண்டவை. இரு அமைப்புகளும் மக்களிடம் வெறுப்பை பரப்புகின்றன. 140 ஆண்டுகால வரலாற்றை கொண்ட ஒற்றுமைக்கும், மக்கள் இயக்கத்திற்கும் முன்மாதிரியாக திகழும் காங்கிரஸ், வெறுப்பு அமைப்புகளிடம் கற்க என்ன இருக்கிறது?' என்று கூறியுள்ளார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்.
காங்., மூத்த தலைவர்களுள் ஒருவரான திக்விஜய் சிங், சமீபத்தில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்; அடுத்த நாளே, 'பல்டி' அடித்து விட்டது வேறு விஷயம்.
மற்றொரு காங்., - எம்.பி., சசிதரூரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பாராட்டியுள்ளார். ஏன்... இந்தியாவின் முதல் பிரதமரான நேருவே, ஆர்.எஸ்.எஸ்.,சின் நாட்டுப் பற்றையும், அந்த அமைப்பின் சேவையையும் பாராட்டினார் என்பது வரலாறு!
ஆனால், மாணிக்கம் தாகூரோ, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவுடன் ஒப்பிட்டு விஷத்தை கக்கியுள்ளார்.
நுாற்றாண்டு கண்ட சமூக சேவை அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், இதுவரை எத்தனை இடங்களில் வெடிகுண்டு வீசியுள்ளன, எத்தனை பயங்கரவாத செயலை அரங்கேற்றியுள்ளது, எத்தனை அப்பாவிகளின் உயிரை காவு வாங்கியுள்ளது, எவ்வளவு பேர் அங்ககீனமாகியுள்ளனர், எவ்வளவு பேர் தங்கள் குடும்பத்தை இழந்துள்ளனர் என்பது குறித்த புள்ளிவிபரங்களை மாணிக்கம் தாகூரால் பட்டியலிட முடியுமா?
அதேநேரம், கடந்த 1984ல் முன்னாள் பிரதமர் இந்திராவை, சீக்கிய காவலாளி சுட்டுக் கொன்றார். இதையடுத்து, காங்., மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் தலைமையில், அக்கட்சியினர் டில்லி முழுதும் ஆடிய வெறியாட்டத்தில், 2,800க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா முழுதும், கிட்டத்தட்ட, 17,000 சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர்.
பயங்கரவாத இயக்கமான அல் குவைதாவே, ஒரே நேரத்தில் இத்தனை பேரை கொன்று குவித்ததில்லை; காங்., அதை செய்தது.
இப்போது சொல்லுங்கள், எது பயங்கரவாத அமைப்பு என்று!
மஹாத்மா காந்தியின் மீதான பற்று நாடகம் போதும்! வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: மஹாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் சில மாறுதல்களுடன், 'விக்சித் பாரத் ரோஜ்கர்' என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு திட்டமாக மாறி, பார்லிமென்டின் அங்கீகாரம் பெற்று சட்டமாகி விட்டது.
அத்திட்டத்தில் மஹாத்மா காந்தியின் பெயர் இல்லை என்பதை தவிர்த்து, அதில் குறைபட எதுவும் இல்லை. காரணம், இதுவரை 100 நாட்கள் வேலை வாய்ப்பை பெற்ற கிராமப்புற மக்கள், புதிய திட்டத்தின்படி, இனி, 125 நாட்கள் வேலை வாய்ப்பை பெறுவர்.
ஆனாலும், இத்திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்க காரணம், மஹாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதால் அல்ல; முன்பு, பழைய 100 நாள் வேலை திட்டத்தின் செலவுகளை மத்திய அரசு ஏற்றது. தற்போது, அச்செலவை மாநில அரசுக்கும் பகிர்ந்தளித்துள்ளது.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரம் தான் இவர்களுக்கு முக்கியம் என்றால், மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள இத்திட்டத்திற்கான, 40 சதவீத செலவை மாநில அரசு சந்தோஷமாக அல்லவா ஏற்க வேண்டும்; மாறாக, ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்?
மஹாத்மா காந்தியின் மீது உண்மையிலேயே பற்று இருந்தால், சத்தியம், தர்மம், அஹிம்சை என்ற அவரது மூன்று கொள்கைகளையும் அல்லவா தங்கள் ஆட்சியில் கடைப்பிடித்திருக்க வேண்டும்?
மாறாக, வாரிசு அரசியல், லஞ்சம், ஊழல் என்ற கொள்கையை வைத்திருப்பது ஏன்?
'ஒவ்வொருவரும் தங்களுக்கான இலக்கை அடைய, நேர்மையான வழிகளிலேயே பயணப்பட வேண்டும்' என்பது தான் அவரது பிரதான கொள்ளையே!
இக்கொள்கையின்படி தான், 'இண்டி' கூட்டனியில் உள்ள, தி.மு.க., செயல்படுகிறதா?
சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்றார் காந்தி. அவர் வார்த்தையை மதித்து, காங்கிரசை கலைத்து விட்டனரா?
எனவே, ௧௦௦ நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப் பட்டதற்கான ஒப்பாரி அல்ல இது!
'அய்யோ பணமே கையை விட்டு போய் விடுமே...' என்பதால் வரும் ஒப்பாரி?

