PUBLISHED ON : ஜன 05, 2026 02:51 AM

மதுபானம் என்ன... குளிர்பானமா?
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் கஞ்சா போதைப் பொருள் அடியோடு ஒழிக்கப்பட்டு, கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்றி சாதனை படைத்துள்ளார் முதல்வர்' என்று கூறியுள்ளார், சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்.
இந்த ஆண்டின் துவக்கத்திற்கான மிகச்சிறந்த காமெடி இதுதான்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வடமாநில வாலிபர் மீது தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள், கஞ்சா போதைக்கு ஆளானவர்கள் என்று மாவட்ட காவல் துறை அதிகாரியே கூறிவிட்டார்.
ஆனால், தமிழகத்தில் கஞ்சா அறவே கிடையாது என்று பேட்டியளிக்கிறார், அமைச்சர். அவர் பேட்டி அளித்த மறுநாளே, சென்னையை அடுத்த திருவொற்றியூரில், எட்டு கிலோ கஞ்சா பிடிபட்டது.
ஒரு படத்தில் தமாஷ் நடிகர் வடிவேலு, அடுத்தவர் தன்னை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக மாறுவேடம் போட்டுத் திரிவார். ஆனால், அவரது ஸ்பெஷல் அடையாளமான கொண்டையை மறைக்க மறந்து விடுவார்.
அதுபோல், குக்கிராமம் வரை போதைப் பொருட்கள் பரவி, தினந்தோறும் குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், 'தமிழகத்தில் கஞ்சா அறவே இல்லை' என்கிறார் அமைச்சர்.
இவர் தான் இப்படி என்றால், டாஸ்மாக் வருமானத்தில் ஆட்சி நடத்தும் முதல்வர், 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்...' என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
கஞ்சா மட்டும்தான் போதையைத் தருமா; மதுபானம் என்ன குளிர்பானமா?
மதுக்கடைகளை மூடிவிட்டு இதுபோன்று அறிவுரை கூறினால், அதில் ஓர் அர்த்தம் இருக்கு!
வீதிதோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து ஆண்களை எல்லாம் குடிகாரரர்களாக்கி விட்டு, மகளிருக்கு உரிமை தொகை என, எத்தனை ஆயிரம் ரூபாயை கொடுத்தாலும், அது, வாயிற்புறமாக மகளிருக்கு சென்று, கொல்லைப்புறம் வழியாக மதுக்கடைக்கே வந்து சேரும்.
இதைத்தான், 'கொடுப்பது போல் கொடுத்து, பின் பறிப்பது' என்பது!
இந்த தந்திரமெல்லாம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை.
தமிழகத்தில், 47 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர் என்றும், அதில், பெரும்பாலும் இளம்வயதினரே அதிகம் என்றும், ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
குடிப்பழக்கத்திற்கு ஆளான மூன்று பெண் குழந்தைகளின் தந்தை, 'பாரில்' நடந்த மோதலில், கொலை செய்யப்பட்டார்.
அவருடைய மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.
இதுபோன்று குடிப்பழக்கத்தால் சீரழிந்து போன குடும்பங்களும், அனாதையான குழந்தைகளும் ஏராளம். அரசு வழங்கும், 1,000 ரூபாய் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி விடுமா?
இளையோரை சீரழிக்கும் 'ரியாலிட்டி ேஷா!'
வே.பழனியப்பன், கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக தொலைக்காட்சி ஒன்று, 'ரியாலிட்டி ேஷா' என்ற பெயரில், ஒரு வீட்டிற்குள் குறிப்பிட்ட சிலரை நுாறு நாள்கள் தங்க வைத்து, அவர்களின் நட வடிக்கைகளை ஒளிபரப்புகி றது.
அவ்வீட்டில் தங்கியிருக்கும் போட்டியாளர்கள் வெளிப்படுத்தும் வன்மம், கோபம், கேவலமான காதல் போன்றவற்றை பார்வையாளர்களுக்கு கடைப்பரப்பி, அதன் வாயிலாக தன் டி.ஆர்.பி.,யை ஏற்றுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு, தணிக்கை இல்லை என்பதால், போட்டியாளர்கள் பேசும் அருவருப்பான வார்த்தைகளை, அப்படியே ஒலிபரப்புகின்றனர். அதைப் பார்க்கும் பள்ளி மாணவர்கள், அந்த ஆபாச வார்த்தைகளை சரளமாக பேசுகின்றனர்.
மேலும், ஒருவருக்கு ஒருவர் போடும் கேவலமான சண்டைகளையும், பெண்களை கீழ்த் தரமாக பேசுவதையும் பார்க்கும் இளைஞர்கள் மனதில், இந்நிகழ்ச்சி வக்கிர எண்ணத்தையே உருவாக்கும்.
ஏற்கனவே, போதையால் சீரழிந்து கிடக்கும் இளைஞர்களை, இதுபோன்ற மட்டமான, 'ரியாலிட்டி ேஷா'க்கள், மேலும் தவறான பாதையில் வழிநடத்துவதாகவே உள்ளன.
'ரியாலிட்டி ேஷா' என்ற பெயரில், சமூக பொறுப்பற்று இதுபோன்ற அசிங்கங்களை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு, அரசு தடை விதிக்க வேண்டும்!
பழனிசாமி யோசிக்க வேண்டும்!
சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலுக்கான கூட்டணியை நீட்டி முழக்கியபடியே, இதுவரை அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தத்தம் பிரசாரங்களை தனித்தனி ஆவர்த்தனங்களாக நடத்தி வந்தன.
தற்போது, தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்கும், தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்குமான நேரம் வந்து விட்டது.
இப்போது செய்ய வேண்டிய வேலைகளை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் போனால், வர வேண்டிய வெற்றியும் வராமலேயே போய் விடும் என்பதை இரு கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும்.
'ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்' எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தேர்தலின் போது தத்தம் தொண்டர்கள், ஓட்டுச் சாவடிகளில் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., 170 -சீட்டுகளில் தனித்துப் போட்டியிடுவதாக திட்டமிட்டிருந்தால், அதைச் சற்றே மாற்றி, 120- சீட்டுகளில் அ.தி.மு.க.,வும், மற்ற கட்சிகள் தே.ஜ., கூட்டணியில் சேரும் பிற கட்சிகளுக்கு என கவுரவமான முறையில் பிரித்தளிக்க வேண்டும்.
அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்க, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
அ.தி.மு.க., தனக்கு மட்டும் 170 -சீட்டுகள் வேண்டும் என்று அடம் பிடித்தால், அது நாட்டுக்கும் நல்லதல்ல; கட்சிக்கும் நல்லதல்ல.
எனவே, தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் பிடித்து, நந்தவனத்து ஆண்டி, கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்த தோண்டி போல், கூட்டணியை பழனிசாமி உடைத்துவிடக் கூடாது!

