PUBLISHED ON : ஜன 06, 2026 01:37 AM

முதல்வருக்கு என்ன வேலை?
எம்.ராமையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து போதைப் பழக்கங்களில் இருந்து தடுக்க வேண்டும்; போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பல்ல; மத்திய அரசின் பொறுப்பு' என்று திருவாய் மலர்ந்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.
அவரது பேச்சின் உள்நோக்கம்... 'டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது சத்து பானமே தவிர, போதை பொருளல்ல. அதனால், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, தமிழக அரசின் மதுவிற்பனையை குறை சொல்லாமல், உங்கள் பிள்ளைகளை நீங்கள் தான், மதுபோதையில் இருந்து காக்க வேண்டும்' என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலை தடுக்க வேண்டியது மாநில அரசின் வேலை அல்ல என்றால், மாநிலத்தில் உள்ள காவல் துறையின் வேலை என்ன?
ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், கழக உடன் பிறப்புக்கள் தவறு செய்யும் போது, அவர்களை, 'காபந்து' செய்வதுமா?
திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சாகசங்களில் ஈடுபடுவோரை பொதுமக்கள் தாக்க முயன்றால், அவர்களை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதும், குற்றவாளிக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டாமல் அவர்களை வெளியில் உலாவ விடுவதும் தான் காவல் துறையின் வேலையா?
அதுசரி... காவல் துறையின் தலைவரான முதல்வர், தன் முழுநேர வேலையாக தன் தந்தை கருணாநிதி புகழ் பாடுவதும், அவரது திருப்பெயரை எந்தெந்த இடங்களுக்கு சூட்டலாம் என்று சிந்திப்பதும், மாலையில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தங்களின் புகழ் பாடுவோருக்கு, 'பொற்கிழி' வழங்கி பாராட்டுவதை மட்டுமே தன் பணியாக நினைத்து செயல்படும் நிலையில், காவல் துறையினரின் பணியை மட்டும் எப்படி அறிந்திருக்கப் போகிறார்?
அரசிற்கு மக்கள் தண்டனை வழங்குவர்!
பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி, சிதம்பரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வடமாநில இளைஞர் ஒருவர், போதை சிறுவர்கள் நான்கு பேரால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ, மனதை உறைய வைத்துவிட்டது.
இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 'தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமே இல்லை' என்று சத்தியம் செய்கிறார்.
அப்படியெனில், தாக்குதல் நடத்திய சிறுவர்கள், போதையில் வெறியாட்டம் ஆடியது, திராவிட மாடல் அரசு வீதிதோறும் அமைத்துள்ள டாஸ்மாக் கடைகளில் வழங்குகின்றனரே, 'சாத்துக்குடி' சாறு... அதை குடித்து விட்டுத் தான், இச்செயலை அரங்கேற்றினரோ!
தவறு செய்தவன், திருத்திக் கொள்ள வேண்டும்; தப்பு செய்தவன் வருந்த வேண்டும். அதுதான் நல்ல மனிதர்களுக்கு அடையாளம்.
ஆனால், தி.மு.க., ஆட்சியாளர்கள், தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளவும் மாட்டார்கள்; தப்பை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்.
ஆட்சியாளர்கள் தான் இப்படி என்றால், சட்டமும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது.
வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கிய நான்கு குற்றவாளிகளையும் சிறையில் தள்ளாமல், சிறுவர் சீர்த் திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் குற்றங்கள் செய்தால், பெரிதாக தண்டனை கிடைக்காது என்ற எண்ணமே, இளவயது குற்றவாளிகள் அதிகரிக்க காரணம்.
எனவே, பெரியவர், சிறியவர் என எவர் குற்றம் செய்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
அதேநேரம், போதையில் மூளை மழுங்கிப் போனவர்களுக்கு நியாயம், தர்மம் தெரியாது; தங்கள் செயலின் வீரியத்தையும் அறிய மாட்டார்கள்.
அவ்வகையில், போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய அரசே முதல் குற்றவாளி!
அரசின் இக்குற்றத்திற்கு நீதிமன்றம் தண்டனை வழங்க முடியாது தான்; ஆனால், மக்களால் தண்டனை வழங்க முடியும் என்பதை தி.மு.க., அரசு நினைவில் கொள்ள வேண்டும்!
வரி என்ற பெயரில் மக்களை கசக்கி பிழியலாமா? ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமநாதபுரம் நகராட்சியில் சொத்து வரியுடன், 'குப்பை வரி' என்ற பெயரில் கணிசமான தொகை வசூலிக்கப்படுகிறது. நகராட்சி அமைப்பின் அடிப்படை வேலையே, தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி, மக்கள் வாழும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமா கவும் வைத்திருப்பது தான்.
அதற்காகத் தான் சொத்து வரியே வசூலிக்கின்றனர்.
அப்படியிருக்கும் போது, தனியாக எதற்கு குப்பை வரி?
இதில், பாதாள சாக்கடைக்கு தனியாக வரி விதிக்கப்படுகிறது. ஆனால், ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் தோல்வியடைந்து, தெருக்களில் சாக்கடை நீர் நிரம்பி வழிந்து, வீடுகளுக்குள் புகுந்து, சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. கூடவே, தெரு நாய்களின் தொல்லை!
இவை எவற்றையும் சரிசெய்யாமல், ஏற்கனவே, சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளது போதாதென்று, 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல்' இதுபோன்ற கூடுதல் வரிகளையும் விதித்து மக்களை கசக்கிப் பிழிகின்றனர்.
இதற்கு மேலும் நகராட்சி வரிவிதிக்க வேண்டும் என்றால், ஜன'வரி'யும், பிப்ர'வரி'யும் தான் மிச்சம் உள்ளது.
தேவையற்ற இலவசங்களை வாரி வழங்கி, அதற்கான நிதிக்காக மக்களை கசக்கிப் பிழிவது எந்த வகையில் நியாயம்?
தி.மு.க., டிபாசிட் இழப்பது நிச்சயம்! என்.ஸ்ரீதர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் என, தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது.
போலீசார் மட்டும் தான் போராடவில்லை; அனைத்து துறையினரும் வீதிக்கு வந்து விட்டனர்.
இதற்கெல்லாம் காரணம், எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடவேண்டும் என்ற பேராசையில், இஷ்டத்திற்கு தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள்!
'சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று வெற்று சவடால் அடித்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், இன்று அத்தனை பேரையும் நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.
இதில், ஜனநாயக உரிமையான போராட்டத்தைக்கூட முறைப்படி நடத்த விடாமல், அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி பஸ்சில் ஏற்றுவதும், பின், எங்காவது ஓர் இடத்தில் இறக்கி விட்டு திண்டாட வைப்பதும், பாசிச நடவடிக்கையின் உச்சம்.
எனவே, போராட்டத்தை அடக்க நடவடிக்கைகள் எடுப்பதை விடுத்து, போராடுவோரின் குறைகளை காது கொடுத்து கேட்டு, சுமுகமான முடிவுகள் எடுக்காவிட்டால், வரும் தேர்தலில் தி.மு.க., டிபாசிட் இழப்பது நிச்சயம்!

