PUBLISHED ON : ஏப் 11, 2026 12:00 AM

'கட்சியை கட்டுக்குள் வைத்துக் கொள்வதே பெரிய பிரச்னையாக இருக்கிறதே...' என, எரிச்சலுடன் கூறுகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில், முன்னணி தலைவராக செயல்பட்டு வந்தவர் தான், ஏக்நாத் ஷிண்டே.
திடீரென, அந்த கட்சியை இரண்டாக உடைத்து, சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுடன், பா.ஜ.,வுக்கு ஆதரவு கரம் நீட்டினார்; இதற்கு பரிசாக, ஷிண்டேவுக்கு, முதல்வர் பதவியை பரிசளித்தது, பா.ஜ., தலைமை. கட்சியும் அவரது வசம் வந்தது.
அதன்பின், 2024ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை பிடித்தது. ஆனாலும், இம்முறை ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவிதான் கிடைத்தது.
ஷிண்டே முதல்வர் பதவியில் இருந்தபோது, சிவசேனா கட்சி நிர்வாகிகள், அவரது கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது முதல்வர் பதவியில் இல்லாததால், பெரும்பாலான நிர்வாகிகள், மீண்டும் உத்தவ் தாக்கரே பக்கம் ஓட்டம் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
இதையறிந்த ஷிண்டே, நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தால், கட்சி கையை விட்டு போய் விடுமே என்ற கலக்கத்தில் உள்ளார். உத்தவ் தாக்கரே தரப்பினரோ, 'துரோகம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது...' என, சாபம் விடுகின்றனர்.
