PUBLISHED ON : பிப் 28, 2024 12:00 AM

'அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார்; இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்...' என, சமாஜ்வாதி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான, அகிலேஷ் யாதவின் முடிவு பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு விஷயத்தில் இழுபறி நிலவியது.
இங்கு காங்கிரசுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அமேதியில் போட்டியிட்ட ராகுலே தோல்வி அடைந்தார்.
இதனால், இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் தயக்கம் காட்டினார்.
இந்நிலையில், காங்கிரசுக்கு 17 தொகுதிகளை ஒதுக்குவதாக அகிலேஷ் யாதவ் திடீரென அறிவிக்க, இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அகிலேஷ் எடுத்த இந்த முடிவு, அவரது கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'உ.பி.,யில் காங்கிரசின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அந்த கட்சிக்கு, 17 தொகுதிகளை ஒதுக்கியதன் வாயிலாக, பா.ஜ., கூட்டணி அந்த தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற, அகிலேஷ் வழி வகுத்து விட்டார்...' என்கின்றனர், சமாஜ்வாதி கட்சியினர்.

