PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM

'கேலி, கிண்டலுக்கு ஒரு அளவு வேண்டாமா...' என, கேரளாவின் எதிர்க்கட்சியினரை பார்த்து ஆவேசப்படுகின்றனர், அங்குள்ள ஆளுங்கட்சியினர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்டவை எதிர்க்கட்சிகளாக உள்ளன.
இங்கு, சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீணா ஜார்ஜ், சமீபத்தில் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையின் ஒரு சிறிய பகுதி இடிந்து விழுந்தது; அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் பலியானார்.
இந்த மருத்துவமனை கட்டப்பட்டு, 68 ஆண்டுகளாகி விட்டன. தொடர் மழையால் சேதமடைந்து இருந்ததால், அந்த கட்டடம் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சியினரோ, 'சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ஒழுங்காக வேலை செய்யவில்லை. மழையால் கட்டடம் சேதமடைந்திருந்ததை அதிகாரிகள் அவருக்கு சொல்லவில்லையா; அதை, அவர் ஆய்வு செய்யவில்லையா... வீணா ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும்' என்றனர்.
மேலும், சமூக வலைதளங்களிலும் வீணா ஜார்ஜை கிண்டல் செய்து, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வீணா ஜார்ஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'கட்டடம் இடிந்து விழுந்ததற்காக, ஒரு அமைச்சரை இப்படியா விமர்சிப்பது...' என கொந்தளிக்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.