18 வயதில் ஒரு துறவறப் பயணம்: நிமிஷாவின் ஆன்மீகப் புரட்சி
18 வயதில் ஒரு துறவறப் பயணம்: நிமிஷாவின் ஆன்மீகப் புரட்சி
PUBLISHED ON : பிப் 19, 2026 08:44 PM

இன்றைய நவீன உலகில், 18 வயது என்பது இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தேடி ஓடும் பருவம்.
கையில் அதிநவீன மொபைல் போன்கள், கண்களில் மேலைநாட்டு நாகரீகக் கனவுகள் எனத் துடித்துக்கொண்டிருக்கும் தலைமுறைக்கு மத்தியில், கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த நிமிஷா என்ற இளம்பெண் ஒரு ஆச்சரியமான முடிவை எடுத்துள்ளார். தனது 18-வது வயதில், வசதிகள் நிறைந்த உலகியல் (லௌகீக) வாழ்க்கையைத் துறந்து, சமண மதத்தின் கடினமான துறவறப் பாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த ஊர்வலத்தின் மிக முக்கியமான நிகழ்வு 'வர்ஷிதான்'. தான் இதுவரை அனுபவித்த செல்வம், பணம் மற்றும் ஆபரணங்களை மக்களுக்குத் தானமாகத் தூக்கி எறிந்தார் நிமிஷா. 'இனி இந்தச் செல்வங்கள் எனக்குத் தேவையில்லை; இவை வெறும் விலங்குகள்' என்பதை உலகிற்குச் சொல்லாமல் சொல்லும் ஒரு அடையாளச் சடங்கு அது.
நிமிஷாவின் துறவறம் என்பது வெறும் ஆடை மாற்றமல்ல; அது ஒரு கடுமையான உடல் மற்றும் மனப் பயிற்சி. 'கேசலோசம்' என்ற சடங்கின் மூலம், அவர் தனது தலைமுடியைக் கத்தரிக்கோல் பயன்படுத்தாமல், கைகளாலேயே ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிவார். உடலின் மீதான பற்றை நீக்கவும், அகிம்சையைப் பேணவும் செய்யப்படும் இந்தச் சடங்கு, அவரது அபாரமான மன உறுதியை வெளிப்படுத்துகிறது.
ஏகப்பட்ட கனவுகளுடன் காத்திருந்த தாய்-தந்தையருக்கு, இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். துறவறம் புகுவதற்கு முன் நிமிஷா தனது குடும்பத்தினருடன் அமர்ந்து உண்ட 'கடைசி உணவு', ஒரு பிரிவின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு புதிய பிறப்பின் தொடக்கமாகவும் அமைந்தது. இனி அவர் தனது பெற்றோரை 'அம்மா, அப்பா' என்று அழைக்க முடியாது; அவர்களுக்கு இனி அவர் ஒரு ஆன்மீக குருவாகவே பார்க்கப்படுவர்.
இனி நிமிஷாவின் வாழ்க்கை ஒரு சராசரி மனிதனின் கற்பனைக்கு எட்டாத விதிகளைப் பின்பற்றும்:
வாழ்நாள் முழுவதும் காலணிகள் அணியாமல் வெறும் கால்களாலேயே நடப்பார். எவ்வித வாகனங்களையும் பயன்படுத்த மாட்டார்.சமைத்த உணவைச் சேமிக்காமல், வீடுகளில் யாசகம் பெற்று மட்டுமே உண்பார். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தண்ணீர் கூட அருந்த மாட்டார்.கண்ணுக்குத் தெரியாத உயிர்களையும் காக்க 'ரஜோஹரன்' (வெள்ளை மயிர் தோகை) ஏந்தி நடப்பார். மின்சாரம் மற்றும் நவீன வசதிகளை முற்றிலும் தவிர்ப்பார்.
நவீன நாகரீகத்தை 'விஷம்' எனப் பார்க்கக் கற்றுக்கொண்ட நிமிஷாவின் இந்த முடிவு, ஆச்சரியத்தையும் மரியாதையையும் ஒருசேரத் தூண்டுகிறது. 18 வயதில் ஒரு பெண் தனது அனைத்துச் சுகங்களையும் துறந்துவிட்டு, 'எதன் மீதும் ஆசையில்லாத நிலையே உண்மையான மகிழ்ச்சி' என்பதைத் தேடிப் புறப்பட்டிருப்பது, இந்த உலகிற்கு அவர் தரும் ஒரு மிகப்பெரிய அமைதிச் செய்தி. இனி அவர் ஒரு சாதாரணப் பெண் அல்ல; உலகிற்கு அறத்தைப் போதிக்கும் ஒரு 'சாத்வி'.
-எல்.முருகராஜ்

