PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

'சினிமா நடிகராக இருப்பது, ஒரு பக்கம் புகழ் வெளிச்சத்தை தந்தாலும், மற்றொரு பக்கம் தர்மசங்கடத்தையும் தருகிறதே...' என புலம்புகிறார், பிரபல மலையாள நடிகரான மோகன்லால்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தங்கள் கட்சிக்கு பிரசாரம் செய்வதற்காக, திரைப்பட நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அரசியல் கட்சிகள் வலை வீசி வருகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில், திருச்சூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகவும் வலம் வருகிறார். இதையடுத்து, அரசியல் கட்சிகளிடையே நடிகர்களுக்கு, 'கிராக்கி' அதிகரித்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலை எப்படியாவது தங்கள் கட்சியில் சேர்க்க, மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் காங்., கட்சிகள் மறைமுக பேச்சை துவக்கியுள்ளன.
பா.ஜ.,வினரோ, 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான், திரைப்பட துறையினருக்கு வழங்கப்படும் உயரிய, 'தாதா சாஹேப் பால்கே' விருதை மோகன்லாலுக்கு சமீபத்தில் வழங்கியுள்ளது. அதனால், அவர் எங்கள் கட்சிக்கு தான் வருவார்...' என, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மோகன்லாலோ, 'தேர்தல் முடியும் வரை, எங்காவது தலைமறைவாகி விடலாமா...?' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்.