PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

‘அவர் மனதில் ஏராளமான ஆசைகள் உள்ளன; அவற்றை நிறைவேற்ற, முடிந்த வரை முயற்சித்து பார்க்கிறார்...’ என, பீஹார் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் குறித்து கூறுகின்றனர், அம்மாநில மக்கள்.
பீஹாரில் முதல்வராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார், கடந்த ஏப்ரலில் தன் பதவியை, கூட்டணி கட்சியான பா.ஜ.,வின் சாம்ராட் சவுத்ரிக்கு விட்டுக் கொடுத்தார். உடல்நல பிரச்னை, ஞாபக மறதி போன்றவற்றால் இந்த முடிவை நிதிஷ் குமார் எடுத்தார்.
இந்த முடிவுக்கு, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘அதிகாரத்தை கூட்டணி கட்சியிடம் கொடுத்தால், நம் கட்சி எப்படி வளரும்...?’ என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, பீஹார் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்திலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிஉள்ளார், நிதிஷ் குமார்.
உ.பி.,யில், அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு, 27 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், இந்த தேர்தலில் பா.ஜ.,விடம் கணிசமான தொகுதிகளை கேட்டுப் பெற, நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார்.
இதற்காக, நிதிஷ் குமார் அடிக்கடி உத்தர பிரதேசத்துக்கு சென்று, தன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பீஹார் மக்களோ, ‘நிதிஷ் குமார் அகல கால் வைக்க முயற்சிக்கிறார்...’ என கிண்டல் அடிக்கின்றனர்.
