PUBLISHED ON : ஆக 15, 2026 01:21 AM

'மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை கூறியது தப்பா...?' என கொந்தளிக்கிறார், காங்கிரஸ் அரசின் தெலுங்கானா மாநில முதல்வரான ரேவந்த் ரெட்டி.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்கள் மத்தியில் பேசிய ரேவந்த் ரெட்டி, 'ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஒரு லட்சம் மாணவர்கள், பொறியியல் படிப்பை முடித்து வேலைக்காக செல்கின்றனர்.
'ஆனால், இவர்களிடம் வேலை செய்வதற்கான திறமை எதுவும் இல்லை; ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்தால் மட்டும் போதும் என நினைக்கின்றனர். ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் வசிப்போரில், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கிலத்தில் பேசத் தெரியும். ஆனாலும் அவர்கள், தயாரிப்பு துறையில் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்...' என, நீண்ட உரை நிகழ்த்தினார்.
இதற்கு, தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமா ராவ், கடும் கண்டனம் தெரிவித்தார்.
'ரேவந்த் ரெட்டி, நம் மாணவர்களை குறைத்து மதிப்பிடுகிறார். இன்று, சர்வதேச அளவிலான பெரிய நிறுவனங்களில் ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் தான் அதிகம் பணியாற்றுகின்றனர். தன் பேச்சுக்கு, ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்...' என்றார்.
ரேவந்த் ரெட்டியோ, 'அறிவுரை கூறியது தப்பா; இதையெல்லாமா அரசியலாக்குவது...?' என, புலம்புகிறார்.
