PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM

'ஏற்கனவே, குஜராத்தில் காங்கிரசின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதில் கூட்டணி என்ற பெயரில், நல்ல தொகுதியை கோட்டை விட்டால் எப்படி?' என புலம்புகின்றனர், இங்குள்ள காங்., கட்சியினர்.
குஜராத், ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. மோடியின் செல்வாக்கு அதிகரித்த பின், காங்கிரஸ் இங்கு படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள, 26 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், 17 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.
இங்குள்ள பரூச் லோக்சபா தொகுதி, தற்போது பா.ஜ., வசம் இருந்தாலும், இங்கு காங்கிரசுக்கு செல்வாக்கு உண்டு. சோனியாவின் நிழலாக விளங்கிய அகமது படேலின் சொந்த தொகுதி என்பதால், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக கருதப்பட்டது.
இங்கு போட்டியிட, அகமது படேலின் மகள் மும்தாஜ் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால், இந்த தொகுதி, கூட்டணி கட்சியான ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
இதனால் மும்தாஜ் மட்டுமின்றி, இங்குள்ள காங்., தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். 'குஜராத்தில், 26 தொகுதிகள் உள்ளன. அதில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
'இதில் வேறு ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்காமல், வெற்றி வாய்ப்புள்ள பரூச் தொகுதியை ஆம் ஆத்மிக்கு ஒதுக்கினால், என்ன அர்த்தம்...' என புலம்புகின்றனர், காங்., தொண்டர்கள்.
