PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

'போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் போலிருக்கிறதே...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.
கடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், அமேதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார் ராகுல். பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதியில் களம் இறக்கப்பட்டதால், பாதுகாப்புக்காக கேரள மாநிலம், வயநாட்டிலும் போட்டியிட்டார், ராகுல்.
அவர் பயந்தது போலவே, அமேதியில் தோல்வி அடைந்தார்.ஆனாலும், வயநாட்டில் பெற்ற வெற்றி, அவருக்கு ஆறுதல் அளித்தது.
விரைவில் நடக்கவுள்ள தேர்தலிலும் வயநாட்டிலேயே போட்டியிட திட்டமிட்டிருந்தார், ராகுல். தேசிய அளவில், 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூ., கட்சிகள், கேரளாவில் காங்கிரசுக்கு எதிராகவே வேட்பாளர்களை களம் இறக்குகின்றன.
ஆனாலும், தனக்கு எதிராக, 'டம்மி' வேட்பாளர் ஒருவர் களம் இறக்கப்படுவார் என, ராகுல் நினைத்திருந்தார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அந்த கட்சியின் பொதுச் செயலர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா, வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் தரப்பு, 'பா.ஜ., தான் நம்மை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறது என்றால், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதே மனநிலையில் உள்ளனரே... பேசாமல், தெலுங்கானா பக்கம் போய் விடுவது நல்லது...' என, முணுமுணுக்கிறது.

