/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
/
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
PUBLISHED ON : டிச 13, 2025 03:09 AM

அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவன கிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம்
நாட்டில் மிகக்கொடிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்படுவது
கிடையாது. அதனால் தான், மதத்தீவிரவாதிகள் மீண்டும் மீண்டும் பயங்கரவாத
செயல்களை இங்கு அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த மாதம்,
டில்லியில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி, பல உயிர்களை பலி வாங்கிய
கொடியவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று, எந்த எதிர்க்கட்சியும்
குரல் கொடுக்கவில்லை.
அப்படி இருக்கையில், நாட்டின்
முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் ஊழல் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை
வழங்க சட்டம் கொண்டு வர, சட்ட மசோதா தாக்கல் செய்து நிறைவேற்ற எப்படி
முன்வருவர்?
ஊழல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது
சகாக்கள் மீது தப்பித் தவறி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில்
நிறுத்தினாலும், அவ்வழக்கை தங்கள் வாழ்நாள் முழுதும் இழுத்தடிப்பு செய்து,
சிறைக்கு செல்லாமல் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக்
கொள்கின்றனர்.
இங்கு, பசிக்கு ஒரு ரொட்டித் துண்டு திருடுபவர்
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால், 1,020 கோடி ரூபாய்
ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் நேருவின் மீது, சரியான ஆவணங்களுடன் இரண்டு
முறை அமலாக்கத் துறை புகார் அளித்தும், அவர் மீது, தமிழக காவல் துறை முதல்
தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை.
இந்த ஆட்சி எப்படி நல்லாட்சியாக இருக்க முடியும்?
சீனாவில், 1,400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், சீன அதிகாரிக்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
அதுபோன்று கடுமையான சட்டம் இங்கு அமல்படுத்தாத வரை, ஊழலை ஒழிக்க முடியாது.
இதுபோன்ற ஊழல்வாதிகளை நாம், திரும்பத் திரும்ப தேர்ந்தெடுத்து ஆளவிட்டால், கடைசியில் நம்மிடம் கோவணம் கூட மிஞ்சாது!
ஊழல்வாதிகள், மனசாட்சிக்கும் பயப்பட மாட்டார்கள்; சட்டத்திற்கும் அடங்க
மாட்டார்கள். அவர்களை அடக்கும் அங்குசம், நம்மிடமே உள்ளது. அதை சரியானபடி
தேர்தலில் பிரயோகித்தால் மட்டுமே ஊழலற்ற ஆட்சி அமையும்!
தேவையற்றது அறநிலையத் துறை என்கிற ஆணி!
பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திருப்பரங்குன்றத்தில் மலை மீதுள்ளது, தீபத்துாணே அல்ல; அது, ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட நில அளவைக் கல்' என, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.
நில அளவுகளை குறிப்பிட வேண்டுமானால், மலை மீதுள்ள பாறைகளில் தான் குறியீடுகளை பதிப்பரே ஒழிய, துாணை நிறுவ மாட்டார்கள்.
இதற்கு சான்று, திருப்பூர் அருகே உள்ள அழகுமலை!
இங்குள்ள மலை உச்சியில், ஆங்கிலேயர் காலத்து, நில அளவை குறியீடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.
அத்துடன், திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத் துாணா, நில அளவைக் கல்லா என்று ஆராய்வது அல்ல வழக்கு; கோவிலுக்கு சொந்தமான அத்துாணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது தான் வழக்கு.
ஆனால், தீபத்துாணில் விளக்கு ஏற்றலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை தடுத்து நிறுத்தி விட்டு, இப்போது, 'அது தீபத்துாண் அல்ல; நில அளவைக் கல்' என்று கூறுவது என்ன பித்தலாட்டம் ?
அது நில அளவைக் கல்லாகவே இருக்கட்டும்; கோவிலுக்கு சொந்தமான அத்துாணில் ஹிந்துக்கள் தீபம் ஏற்றுவதில், திராவிட மாடல் அரசுக்கு என்ன முதுகு அரிப்பு?
'அறநிலையத் துறை அதிகாரிகள் தான் தீபம் ஏற்றுவதை முடிவு செய்வர். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை' என்கிறார், துறை அமைச்சர் சேகர்பாபு.
கோவில்களை நிர்வகிக்கத் தான் அறநிலையத் துறையே தவிர, கோவில்களை அத்துறைக்கு பட்டா போட்டு கொடுக்கவில்லை!
இதில், ஹிந்துக்கள் தங்களுக்கான வழிபாட்டு உரிமைக்காக போராடினால், 'மதவாதிகள் காலுான்ற நினைக்கின்றனர். அதற்கு இந்த அரசு அனுமதிக்காது' என்கிறார், சட்ட அமைச்சர் ரகுபதி.
யார் தமிழகத்தில் காலுான்ற வேண்டும்; எவர் துரத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வது திராவிட மாடல் அரசு அல்ல; மக்கள், என்பதை சட்ட அமைச்சர் மறந்து விட்டார் போலும்!
திருப்பரங்குன்றம் வழக்கில், 2014ம் ஆண்டு தீர்ப்பின்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறுகிறார், ரகுபதி. 2014ல் தீபத் துாண் தர்காவுக்கு சொந்தம் என்றா நீதிமன்றம் கூறியுள்ளது?
இதுபோன்று தான், திருப்பதி மலைக்கோவில் தங்களுக்கே சொந்தம் என, உரிமை கொண்டாடி வழக்குதொடுத்தது, அங்குள்ள தனியார் மடம் ஒன்று!
கடந்த 23 ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில், திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தம் என, தீர்ப்பு வந்தது. '3,402 ஏக்கர் நிலங்கள் கோவில் பணிகளுக்கு மட்டுமே பயன்படும்; வர்த்தக நோக்கங்களுக்கு அனுமதி இல்லை' என்பதில் உறுதியாக நிற்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
ஆனால், இங்குள்ள அறநிலையத் துறையோ, கோவில் நிலங்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு சிறுபான்மையினர் ஓட்டுக்காக, ஹிந்துக்களை தீபம் ஏற்ற அனுமதிக்காமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கோவில் உரிமைகளை விட்டுக் கொடுத்தும், அதன் சொத்துகளை பாதுகாக்காத நிலையில், கோவில்களுக்கு எதற்கு அறநிலையத் துறை?
தேவையற்ற இந்த ஆணி யை பிடுங்கி, துாக்கி எறியாத வரை, கோவில்களின் புனிதம் காக்கப்படாது!
அ.தி.மு.க.,விற்கு வெற்றி சாத்தியமா?
வீ.ராஜகோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், அ.தி.மு.க., - தி.மு.க., என்ற நிலை மாறி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் நேரடி போட்டியில் களமிறங்கி, தி.மு.க., - த.வெ.க., என்ற நிலையில் ஆதிக்கம் பெற்று வருகிறது.
தி.மு.க., மீதான எதிர்ப்பு அலை, விஜயின் அரசியல் கூட்டங்களில், எதிரொலித்து வருவது கண்கூடு.
இது தேர்தலில், தி.மு.க.,விற்கு பெருத்த அடியாக விழும் என்பது சர்வ நிச்சயம்.
இதை உணர்ந்ததாலோ என்னவோ, 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இறுமாப்புடன் கூறிக் கொண்டிருந்த தி.மு.க., தலைமையால், தற்போது, அதுபோன்று கூற முடியவில்லை.
ஒருவேளை, தி.மு.க., வெற்றி பெற்றாலும், கண்டிப்பாக, அது தொங்கு சட்டசபைக்கு தான் வித்திடும். தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கும் நிலையில், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், தமிழகத்தின் கதி அதோகதி தான்!
அதே சமயம், அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க வேண்டுமாயின், அது பல சமரசங்களை ஏற்படுத்தி, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து, கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து, தேர்தலில் களமிறங்குவதுடன், தி.மு.க.,விற்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தினால் மட்டுமே அக்கட்சிக்கு வெற்றி சாத்தியமாகும்!

