PUBLISHED ON : டிச 12, 2025 03:42 AM

எம்.முருகையா,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிதம்பரம், அண்ணாமலை
பல்கலை, கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிய போது, அதை எதிர்த்த
உதயகுமார் என்ற மாணவர், மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதுகுறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போது, அம்மாணவனின் தந்தையை
விட்டே, இறந்தது தன் மகனே அல்ல என்று கூற வைத்தார், தி.மு.க., தலைவர்
கருணாநிதி.
அப்படியென்றால், இறந்த மாணவன் யார், அவனது பெயர் என்ன,
அந்த உதயகுமாரின் உடலுக்கு உரிமை கோரி எடுத்து சென்றவர்கள் யார் என்பது
போன்ற வினாக்களுக்கு, இதோ, 50 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்று வரை விடை
கிடைத்தபாடில்லை.
அதுபோன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தும்,
விளக்கு ஏற்ற விடாமல் தடுத்ததுடன், அது தீபத்துாணே அல்ல; சர்வே கல்
என்கிறது தி.மு.க., அரசு.
அதையும் நிரூபிக்க இங்கே ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது.
கொஞ்ச நாள் போனால், அதை துணி துவைக்கும் சலவைக்கல் என்று கூட கூறுவர்.
எந்த நாட்டில் சர்வே கல், 10 அடி உயரத்தில், கீழே பீடத்துடன் இருக்கும்
என்ற பகுத்தறிவு இல்லாத, 'டாஸ்மாக்'கில் மூளையை அடகு வைத்த கூட்டம் ஒன்று,
அதற்கும் ஆமாஞ்சாமி போடும்!
கிறிஸ்துவ மதத்தில் பல பிரிவுகள்
இருந்தாலும், அவர்கள் கிறிஸ்துவர்கள் என்பதில் ஒருபோதும் விட்டுக்
கொடுப்பதில்லை; இஸ்லாத்தில் எத்தனையோ பிரிவுகள் இருந்த போதிலும், முஸ்லிம்
என்று வரும் போது, நாடு, மொழி கடந்து அனைவரும் ஓரணியில் திரண்டு
விடுகின்றனர்.
ஆனால், உலகிலேயே தாங்கள் பிறந்து, வளர்ந்த
மதத்திற்கு நன்றியும், விசுவாசமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர்
இனம் உண்டென்றால், அது ஹிந்துக்கள் தான்!
தாங்கள் சார்ந்த மதத்தை,
தங்கள் நம்பிக்கையை ஒரு கூட்டம் கேலி செய்யும் போது, அதை கைகட்டி, வாய்
பொத்தி வேடிக்கை பார்ப்பதுடன், அதற்கு ஆமாஞ்சாமி போடும் அவலம் தொடரும் வரை,
ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளை இழந்து கொண்டே இருப்பர்!
காங்கிரஸ் காணாமல் போகும்!
எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் வழக்கில், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்ற காரணத்திற்காக, உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய, தி.மு.க., வும், 'இண்டி' கூட்டணியும் முயற்சிக்கின்றன.
அவரை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்தால், அது இண்டி கூட்டணிக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு அடிக்கும் சாவு மணியாகவே அமையும்.
ஏற்கனவே, துணை முதல்வர் உதயநிதி, 'டெங்கு, மலேரியா கொசுவை ஒழித்தது போல், சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும்' என்று பேசியது, வடமாநிலங்களில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
அதன் விளைவு, 2024 பார்லிமென்ட் தேர்தலில், இண்டி கூட்டணி மண்ணைக் கவ்வியது.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, சிறுபான்மையர் ஓட்டுக்காக, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற மறுத்ததுடன், தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் மீது, 'ஹிந்துக்களுக்கு ஆதரவானவர்' என்று முத்திரை குத்தி, அவரை பதவி நீக்கம் செய்ய முயல்கிறது, தி.மு.க .,
ஹிந்துக்களுக்கு எதிரான தி.மு.க.,வின் வன்மத்தை இன்று இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க.,வின் அதிகார போதைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணிக் கட்சிகள் ஊறுகாயாக பயன்படுமாயின், அது அக்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்!
இதற்கு மிகச் சிறந்த உதாரணம், கடந்த மாதம் நடைபெற்ற பீஹார் தேர்தல்!
பீஹாரிகள் குறித்து தி.மு.க.,வினர் பேசிய மட்டமான பேச்சுக்களே, காங்., அங்கு துடைத்து எறியப்பட காரணமாக இருந்தது.
இப்போது திருப்பரங்குன்றம் மலை விவகாரம்!
ஹிந்துக்களுக்கு எதிரான தி.மு.க.,வின் தீர்மானத்திற்கு காங்., ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அக்கட்சி இனி, வடமாநிலங்களில் செல்லாக் காசாக ஆகப் போவது நிச்சயம்!
ஏற்கனவே, காங்., கடைசி, 10 ஆண்டு ஆட்சியில், தி.மு.க., - எம்.பி., ராசாவின், '2ஜி' ஊழல் பெரும் பேசுபொருளாகி, காங்., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
இனியும், தி.மு.க.,வின் பிடியில் இருந்து காங்., கழன்று கொள்ளாவிட்டால், தேர்தல் அரசியலில் இருந்து அக்கட்சி துடைத்து எறியப்பட்டு விடும்!
உதயநிதி பேசலாமா?
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒரு கட்சி கூட அவர்களை நம்பி செல்லவில்லை' என்று கூறியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி.
தி.மு.க., மீது இருக்கும் அளப்பறியா நம்பிக்கையால் தான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துக் கொண்டே, மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயுடன் கூட்டணி பேச்சு நடத்துகின்றனரோ?
காங்., நிழல் தலைவரான ராகுலின் ஒப்புதல் இல்லாமல் தான், இப்படி இரண்டு பக்கமும் துண்டு போடும் வேலை நடக்கிறதா?
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'கூட்டணி குறித்து புறவாசல் வழியாக பேச மாட்டோம்' என்கிறார், செல்வப் பெருந்தகை.
புறவழி தலைவரான செல்வப்பெருந்தகைக்கு, காங்கிரசின் புறவாசல் கூட்டணி தெரியாது தான்.
இன்று, தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்து கொண்டே, த.வெ.க.,விடமும் கூட்டணி பேரம் பேசுவது போல், மத்தியில் வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது போல் பாசாங்கு செய்து, பா.ஜ., அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற வைத்தார், அன்றைய காங்கிரஸ் தலைவி சோனியா.
அவரது பேச்சை நம்பி, வாஜ்பாய் அரசை கவிழ்த்தார், ஜெயலலிதா.
கடைசியில், 'தேர்தல் வரும் போது பார்க்கலாம்' என்று கூறி, ஜெயலலிதாவை, 'கழற்றி' விட்டவர் தான் சோனியா.
இதுதான், காங்கிரசின் புறவழி கூட்டணி!
அதேபோன்று, ஒருமுறை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, ஜெயலலிதாவை சந்தித்து, 'சி.வி.சண்முகம், பா.ம.க., மீது தொடர்ந்திருக்கும் வழக்கை வாபஸ் வாங்கினால், கூட்டணி வைக்க ராமதாஸ் தயாராக இருக்கிறார்' என்றார்.
அதற்கு ஜெயலலிதா, 'அது, சண்முகத்தின் சொந்த வழக்கு; கூட்டணிக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கூட்டணிக்கு வாருங்கள்' என்று, கறாராக கூறிவிட்டார்.
அந்த தைரியம் ஸ்டாலினுக்கு இருந்திருந்தால், தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்து கொண்டே த.வெ.க.,வுடன் கூட்டணி பேசுமா காங்கிரஸ்?
இப்படி தங்கள் கூட்டணியில் ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு, அ.தி.மு.க., கூட்டணி குறித்து உதயநிதி பேசலாமா?

