PUBLISHED ON : டிச 11, 2025 03:24 AM

ஆர்.ராமையா,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக நகராட்சி
நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,020 கோடி ரூபாய் ஊழல்
நடந்துள்ளதாக மீண்டும் புகார் கூறியுள்ளது, அமலாக்கத் துறை. இதனால்,
தி.மு.க., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அத்துறையின் அமைச்சரான
நேருவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு, அ.தி.மு.க.,
--- பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் குரல் எழுப்புகின்றன.
'அமலாக்கத்துறை, தன் விசாரணை தகவல் களை பகிர்ந்த காரணத்துக்காக மட்டுமே,
அது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என, மணல் கொள்ளை
தொடர்பாக நடந்த ஒரு படுகொலை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக
அரசு தெரிவித்திருந்ததை அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் மறந்து விட்டனரா?
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வித்தகர்கள் தி.மு.க., ஆட்சியாளர்கள்.
அவர்களது ஆட்சியில் ஊழல் புகார் எழவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட
வேண்டும். மணல் கொள்ளை விவகாரத்தில் ஒரு கொலையே நடந்தும், 'வழக்கு தொடுக்க
வேண்டிய அவசியம் இல்லை' என்று மனு போடும் இந்த அரசு, வெறும் ஊழல்
குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடர்ந்திடுமா?
அவையில் வழக்கை
எடுத்து சொன்ன உடனேயே, 'அவனைக் கொன்று வருக' என்று தீர்ப்பளிப்பதற்கு, இது
என்ன பாண்டியன் நெடுஞ்செழியனின் மன்னராட்சியா... இது ஊழலுக்கு பெயர் பெற்ற
தி.மு.க.,வின் மக்களாட்சி!
அத்துடன், நகராட்சி துறை அமைச்சர் நேரு
மீது தி.மு.க., அரசு வழக்கு பதிவு செய்தால் மட்டும் என்ன நடந்து விடப்
போகிறது? அந்தமான் செல்லுலார் சிறையில், சாவர்க்காரின் கை,கால்களில்
சங்கிலி மாட்டி நிறுத்தியது போல், நேருவை கைது செய்து, சிறையில்
நிறுத்திவிடப் போகின்றனரா?
'இன் கேட்' வழியாக உள்ளே சென்று, 'அவுட் கேட்' வழியாக ஜாமின் வாங்கி வெளியே வந்து விடப் போகிறார்.
தேர்தல் எனும் நீதிமன்றத்தில் மக்கள் இவர்களுக்கு தண்டனை கொடுக்காத வரை,
அமலாக்கத் துறை என்ன, அந்த ஆண்டவனே வழக்காட வந்தாலும், இவர்களை ஒன்றும்
செய்ய முடியாது!
குள்ளநரி தந்திரம் எடுபடாது!
ஆர்.முத்தையா, சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திருப்பரங் குன்றம் மலை ஹிந்துக்களுக்கு சொந்தமானது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'அளந்து' விட்டுள்ளார். அனைத்து ஹிந்துக்களுக்குமா அல்லது குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஹிந்துக்களுக்கு மட்டுமா என்பதை அவர் விளக்க வேண்டும்.
'அனைத்து ஹிந்துக்களுக்கும் என அவர் சொன்னால், பட்டியல் ஜாதியை சேர்ந்த ஹிந்துக்கள், கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கு, அண்ணாமலை நடவடிக்கை எடுப்பாரா?' என்று கேட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம்.
திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு சொந்தமா னது என்று சொன்னதற்கும், பட்டியல் ஜாதியை சேர்ந்த ஹிந்துக்கள், கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கும் என்ன சம்பந்தம்?
திருப்பரங்குன்றம் மலை எந்த ஹிந்துவுக்கு சொந்தம் என்று கேட்கும் சண்முகம், அப்படியே தமிழகத்தில் உள்ள மசூதிகளும், தர்க்காக்களும் எந்த முஸ்லிம் களுக்கு சொந்தம் என் பதையும் கூற வேண்டும்!
உருது பேசும் முஸ்லிம்களுக்கா, மதம் மாறிய தமிழ் முஸ்லிம்களுக்கு சொந்தமா?
தமிழ் முஸ்லிம்களுக்கு தான் சொந்தம் என்றால், மதம் மாறிய குப்பனும், கருப்பனும் மவுல்வியின் ஸ்தானத்தில் இருந்து, அவர்களது தாய் மொழியான தமிழில், 'நமாஸ்' செய்ய மார்க்., கட்சி செயலர் சண்முகம் நடவடிக்கை எடுப்பாரா?
ஒரு சாண் வயிற்றிற்காக நாவு நர்த்தனம் ஆடுமாம். இங்கே சண்முகம் போன்றோருக்கு, ஓட்டுப் பிச்சைக்கு எண் சாண் உடம்பே நர்த்தனம் ஆடுகிறது!
சென்னை, ஆதம்பாக்கத்திலுள்ள நந்தீஸ்வரர் கோவிலில் அந்தணர்கள் பூஜை செய்தால், அருகிலுள்ள பழண்டியம்மன் கோவிலில் வேறு இனத்தினர் பூஜை செய்கின்றனர்.
இதுபோன்று எத்தனையோ கோவில்களை உதாரணமாக காட்ட முடியும்.
எனவே, ஹிந்து மதத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தி, அதில் குளிர் காயும் குள்ளநரி தந்திரத்தை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான, மக்களுக்கான அரசியலை சண்முகம் முன்னெடுக்க வேண்டும்!
ஆட்சியில் பங்கு அவசியம்!
எம்.கலைவாணி, அருப்புக் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில், நான்கு முனை போட்டியை சந்திக்க தமிழகம் தயாராகி வருகிறது. தி.மு .க., வுடனான கூட்டணிப் பேச்சு வார்த்தையில், அக்கட்சிக்கு ஜால்ரா அடித்தே பழகிப்போன மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதால், 39 சீட்டு மற்றும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை துணிந்து முன் வைத்துள்ளனர், காங்கிரஸ் கட்சியினர்.
இன்னொருபுறம், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடனும் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது, அக்கட்சி.
காங்கிரஸ் கட்சி துவக்கி வைத்திருக்கும், 'ஆட்சியில் பங்கு' என்ற கோஷம் வலுப்பெற்றுவிட்டால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தை, வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும், தி.மு.க., தலைமையை அசைத்துப் பார்க்க முயற்சிக்கும்.
அமைச்சர்களின் ஆணவப்பேச்சு, கட்சியினரின் அடாவடித்தனம், சீர் கெட்டுப்போன சட்டம் - ஒழுங்கு போன்ற காரணங்களால், ஆளுங்கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கூடவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கின்றனர்.
ஏற்கனவே, நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தால் கதிகலங்கிப்போயிருக்கும் தி.மு.க., தலைமைக்கு, ஆட்சியில் பங்கு என்ற கூட்டணிக் கட்சிகளின் கோஷம், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.,வில் உள்ள விஜய் ரசிகர்களும், அதிருப்தியில் இருக்கும் ஹிந்துக்களும், சிறுபான்மையினரும் ஒட்டுமொத்தமாக விஜய் பக்கம் திரும்பிவிட்டால், தி.மு. க.,வின் கதி அதோகதிதான்!
இத்தகைய இக்கட்டான சூழலில் தனித்து நின்றால், தி.மு.க., 10 இடங்களில்கூட தேறாது. ஒருவேளை, கூட்டணிக் கட்சிகளின் துணையோடு வெற்றிபெற்றாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.
இந்த நிதர்சனத்தை புரிந்துகொண்டதால்தான் அமைச்சர்களுக்கு தேர்தல் ஜூரம் பிடித்துவிட்டது. அந்த நடுக்கத்தில்தான், 'எந்த அரசியல் புயல் அடித்தாலும், தி.மு.க., வெற்றியைத் தடுக்கமுடியாது' என்று, அக்கட்சி அமைச்சர்கள் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆட்சியும், அதிகாரமும் தி.மு.க., - அ.தி.மு.க., என்ற இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே பட்டயம் எழுதிக் கொடுக்கப்படவில்லை. அதனால், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 'ஆட்சியில் பங்கு' என்பதில் இரண்டு அணியிலும் உள்ள கூட்டணிக் கட்சிகள் தங்கள் கோரிக்கையிலிருந்து பின்வாங்காமல் உறுதியாக நிற்கவேண்டும்.
தமிழகத்தில் ஆட்சிமுறைகள் மாறுவதற்கான காலம் கனிந்து விட்டது. 2026 தேர்தல் அதை உறுதி செய்யும்!

