/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நாடகங்களை அரங்கேற்றும் இடமா பார்லிமென்ட்!
/
நாடகங்களை அரங்கேற்றும் இடமா பார்லிமென்ட்!
PUBLISHED ON : டிச 10, 2025 03:21 AM

கோ.
பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பார்லிமென்ட் என்பது ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து
பேசும் இடமே தவிர, நாடகம் அரங்கேற்றும் இடம் அல்ல' என்று கடுமையாக
பேசியுள்ளார், பிரதமர் மோடி.
அவரது பேச்சை உண்மையாக்கும் வகையில், பார்லிமென்டை நாடக சபாவாக நினைத்து, எதிர்க்கட்சியினர் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
திருடு போன, 'ஸ்மார்ட்' போன்களை கண்டறியவும், ஆன்லைன் சைபர் கிரைம்
மோசடிகளை தடுக்கவும், 'சஞ்சார் சாத்தி' என்ற செயலியை, இந்தியாவில்
விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் முன்கூட்டியே நிறுவ வேண்டும்
என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனால், குடிமக்களின்
தனியுரிமை பறிக்கப்படுவதாகவும், மக்களை உளவு பார்ப்பது தான் மத்திய அரசின்
திட்டம் என்று கூறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில்
கூக்குரல் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, 'ஸ்மார்ட்' போன்களில்
சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய
அரசு வாபஸ் பெற்றது.
இதேபோன்று தான், 2018 - -19ல் நடைபெற்ற
பார்லிமென்ட் தேர்தலின் போது, இஸ்ரேல் நாட்டில் இருந்து, 'பெகாசஸ்
ஸ்பைவேர்' என்ற மென்பொருளை வாங்கி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்
உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின்
தகவல்கள் திருடப்பட்டதாகவும், போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறி, 2022ல்
சர்ச்சை எழுப்பி, பார்லிமென்ட் செயல் பாடுகளை எதிர்க்கட்சியினர்
முடக்கினர்.
இது குறித்து விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்தது, உச்ச நீதிமன்றம்.
பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் பலர் இக்குழுவின் முன் ஆஜராகி தங்கள் மொபைல் போன்களை ஆய்வுக்கு கொடுத்தனர்.
நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நிபுணர் குழு வாயிலாக ஆய்வு
செய்யப்பட்ட போது, பெகாசஸ் ஸ்பைவேர் வாயிலாக போன்கள் ஒட்டு
கேட்கப்பட்டதாகவோ, போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட்டதாகவோ
அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என்பது நிரூபணம் ஆகி, எதிர்க்கட்சிகளின்
மூக்கு உடைபட்டது.
இப்போது, 'சஞ்சார் சாத்தி' செயலியை மக்களை உளவு
பார்க்கும் செயலி என்று கூறி, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பிரச்னை
எழுப்புகின்றன.
பிரதமர் கூறியபடி, இவர்கள் தங்கள் தொகுதி
பிரச்னைகள் குறித்து பேசி, அதற்கு தீர்வு காணும் இடமாக பார்லிமென்டை
கருதவில்லை; தங்கள் அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் மேடையாகவே
கருதுகின்றனர்.
இவர்களை தேர்ந்தெடுத்து பார்லி மென்டுக்கு
அனுப்பியுள்ளது, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசி, அதற்கு தீர்வு காணத்தானே
தவிர, இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி பொழுதுபோக்க அல்ல!
ஜொலிக்க முடியவில்லையே!
கே.ஆர்.அனந்த பத்ம நாபன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பலமான உட்கட்டமைப்பு உள்ள கட்சிகளான, பா.ஜ., - திரிணமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,விற்கு அரசியல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், தன் மதிநுட்பத்தால், அக்கட்சிகளுக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
அதேபோன்ற வெற்றியை எதிர்பார்த்து, ஜன் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்து, பீஹார் தேர்தலில் போட்டியிட்டவர், இப்போது மண்ணைக் கவ்வி விட்டார்.
நிறுவனங்களில் பணிபுரிவோரில் சிலர் தங்கள் அனுபவத்தை வைத்து, புதிதாக தொழில் துவங்குவர். ஆனால், தொழிலின் சூட்சுமம் தெரியாமல் நஷ்டம் அடைந்து நிறுவனத்தை இழுத்து மூடுவர்.
காரணம், நிறுவனத்தில் ஒரு தரப்பு வேலைகளை மட்டுமே அவர்கள் அறிந்திருப்பர். அதன் மற்றொரு தரப்பு வேலைகளான நெளிவு சுழிவுகளை அறிந்திருக்க மாட்டார்கள்.
அதுபோன்று தான் அரசியல் கட்சியை எவர் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்; அக்கட்சி வெற்றி பெற வேண்டுமானால், கட்சியின் உட்கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். அரசியல் சூட்சுமம் தெரிந்தவர்கள் அடுத்தகட்ட தலைவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அரசியல் கணக்குகள் வெற்றியாக மாறும்.
இந்த அடிப்படை கட்டமைப்புகள் இல்லாததால் தான், தேர்தல் வியூக வகுப்பாளராக, பலருக்கு வெற்றிக் கனியை பெற்றுக் கொடுத்திருந்தாலும், பிரசாந்த் கிேஷாரால் அரசியல் தலைவராக ஜொலிக்க முடியவில்லை!
தமிழை அழிப்பது தான் அரசின் நோக்கமா?
முனு.ராஜா, சிதம்பரத்தி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின் தொழில் நுட்ப வாரியம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தட்டச்சு பாடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்தி வருகிறது. இதற்கென தமிழகத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 4,500 தட்டச்சு பயிற்சி நிலையங்கள், அரசு நிதியுதவி இன்றி செயல்பட்டு வருகின்றன.
தட்டச்சு இயந்திரத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கென நிலையான விசைப்பலகை உண்டு.
இந்த விசை பலகையை பயன்படுத்தியே தமிழகமெங்கும் இதுவரை, 30 லட்சத்திற்கும் மேலானோர் தமிழ் தட்டச்சு பயிற்சி பெற்றுள்ளனர்.
ஆங்கில மொழி தட்டச்சு வேகத்திற்கு இணையான வேகத்தில், தமிழ் மொழியை தட்டச்சு செய்யும் திறன் இந்த விசை அமைப்பால் சாத்தியமானது; இதர இந்திய மொழிகளிலும், தட்டச்சு வேகம் ஆங்கிலத்திற்கு இணையாக இல்லை.
இந்நிலையில், இதுவரை இருந்து வந்த தமிழ் தட்டச்சு விசை பலகை பயிற்சியை, ஒலியியல் வடிவில் பயிற்சி அளிப்பதற்கு வசதியாக, விசைப் பலகையை மாற்றிட தற்போது தொழில் நுட்ப வாரியம் வலியுறுத்துகிறது.
தமிழ் மொழிக்கே உரித்தான மேற்புள்ளி, கொக்கி, ஓங்காரம் மற்றும் உகரம் போன்ற வடிவுறு விசைகளை நீக்கிட, தொழில் நுட்பவாரியம் வலியுறுத்துவதால், உயிர்மெய் எழுத்துக்களை தமிழ் தட்டச்சுப் பொறிகளில் இனி தட்டச்சு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
ஏற்கனவே, 25 ஆண்டு களுக்கு முன்பே, தட்டச்சு பொறி தயாரிப்பு நிறுவனங் கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன.
இந்நிலையில் ஒலியியல் வடிவில் பயிற்சி அளிக்கப்பட்டால், தட்டச்சுப் பொறிகளில் தற்போதுள்ள வரி வடிவில் தமிழை படிக்க முடியாது.
உதாரணத்திற்கு, 'தமிழ் நாடு' என்பதை, 'தமஇழழ நஆடஉ' என்றே படிக்க முடியும்.
இதுபோன்று தட்டச்சு பயிற்சி அளிக்க வாரியம் வலியுறுத்துவதால், பயிற்சி பெறும் மாணவர்கள், தமிழ் மொழியை படிப்பதற்கும், பயிற்சி பெறுவதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு, அவர்களது தமிழ் அறிவு சிதிலமடைய வாய்ப்பு உள்ளது.
தற்போது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பான தமிழ் தட்டச்சு இயந்திர விசை பலகை இருக்கும்போது, அதை சிதைக்க முயலும், தொழில் நுட்ப வாரியத்தின் செயல்பாடு களை தமிழக அரசு அறியுமா?
பயிற்சி பெற்றிருக்கும், 30 லட்சத்திற்கும் மேலானவர்கள், ஒலியியல் வடிவிலான அமைப்பில் எப்படி தமிழ் தட்டச்சு புரிவர்?
இச்செயல்பாடுகளால், தமிழ் மெல்ல சாகும் என்பதை அரசு அறியவில்லையா, இல்லை அதுதான் அரசின் நோக்கமா?

