PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

'முக்கியமான நேரங்களில் எல்லாம் சொதப்பி விடுகிறார்...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி வருத்தப்படுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
ஏற்கனவே ராகுல் மீது, பா.ஜ.,வினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று, இந்தியாவுக்கு எதிராக பேசுவதாக பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர். 'பகுதிநேர அரசியல்வாதி' என்றும் கிண்டலடிக்கின்றனர். ஆனால், ராகுல் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
சமீபத்தில், வக்ப் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் நடந்தது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், காங்கிரஸ் தரப்பில் ராகுல் தான், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் தான் இந்த விவாதத்தில் பங்கேற்றார். ஆளுங்கட்சி தரப்பிலோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஆவேசமாகப் பேசினர்.
மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதை ஒப்பிடுகையில், காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகோய் பேசியது பெரிதாக எடுபடவில்லை. இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'லட்டு மாதிரி ஒரு விஷயம் கையில் கிடைக்கும் போது, அதை ராகுல் பயன்படுத்தியிருக்க வேண்டாமா; இப்படி கோட்டை விட்டு விட்டாரே...' என புலம்புகின்றனர், காங்., நிர்வாகிகள்.

