PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM

'தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில், மிகவும் ஜாக்கிரதையாகத் தான் செயல்பட வேண்டும்...' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், கேரள மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வி.டி.சதீசன்.
தமிழகத்தைப் போலவே, கேரளாவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் துாக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.
இதை சரி செய்யும்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு ஏற்படுவது தொடர்கிறது.
இந்த சூழ்நிலையில் தான், மின்வெட்டு விஷயத்தில் கேரள அரசு அலட்சியமாகச் செயல்படுவதாகக் கூறி, முதல்வர் சதீசனை கிண்டலடித்து, சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது.
அதில், கேரள மின் வாரிய ஊழியர்களுடன் சேர்ந்து, முதல்வர் சதீசன் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மின்வெட்டால் மக்கள் துன்பப்படும் போது, முதல்வர் நடனமாடுவது போல், அந்த வீடியோ சித்தரிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இது குறித்து சதீசன் கூறுகையில், 'பிரபலமான நடிகர்களை விட, நான் நன்றாக நடனமாடுவதை போல் இருந்தது. நானும் அதை ரசித்தேன்...' என்றார்.
கேரள மக்களோ, 'அப்படியானால், அரசியலில் இருந்து ஒதுங்கி, சினிமாவில் நடிப்பது குறித்து யோசிக்கலாமே...' என, சதீசனை கிண்டலடிக்கின்றனர்.
