PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:09 AM

'புதுமையாக செய்ய நினைத்து, இப்படி சொதப்புகின்றனரே...' என, கூட்டணி கட்சியினரை நினைத்து கவலைப்படுகிறார், கேரள முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சதீசன்.
கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், கேரள காங்கிரஸ் என்ற கட்சி சார்பில், அந்த கட்சியின் மூத்த தலைவர் மான்ஸ் ஜோசப் என்பவர் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சராக பதவியேற்றதும், முதல் முறையாக தன் சொந்த மாவட்டமான கோட்டயத்துக்கு திரும்பினார். தண்ணீர் பீய்ச்சி அடித்து அவரை வரவேற்பதற்கு, ஆளும் கூட்டணி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, இரண்டு குடிநீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன.
மான்ஸ் ஜோசப் வந்ததும், லாரியில் உள்ள குழாய் வாயிலாக, அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க முயற்சித்தபோது, அது அமைச்சர் மீது விழாமல், அருகில் நின்றிருந்த பத்திரிகையாளர்கள் மீது விழுந்தது.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பொது மக்கள், 'அமைச்சரை வரவேற்க இரண்டு லாரி குடிநீரை வீணாக்குவது எந்த வகையில் நியாயம்...' என கொதிப்படைந்தனர்.
இதை கேள்விப்பட்ட முதல்வர் சதீசன், 'நீர்வளத்துறை அமைச்சர் என்பதால், மான்ஸ் ஜோசப்பை வரவேற்க தண்ணீர் பீய்ச்சி அடித்துள்ளனர். இது தவறு தான்...' என, வருத்தம் தெரிவித்ததுடன், 'இவர்களை வைத்து இன்னும் ஐந்தாண்டுகளை எப்படி ஓட்டப் போகிறேனோ...?' என புலம்புகிறார்.
