PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

‘இந்த வயதில் இவருக்கு இது தேவையா...?’ என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி காட்டமாக கேட்கின்றனர், பா.ஜ.,வினர்.
நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், மல்லிகார்ஜுன கார்கே. தற்போது இவருக்கு, 84 வயதாகிறது. மத்திய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர்.
நிதானமாக பேசக் கூடியவர்; எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளக் கூடியவர். அதனால் தான் காங்கிரஸ் தலைவர் பதவி, கார்கேயை தேடி வந்தது. ஆனால், சமீபகாலமாக இவரது நடவடிக்கைகளில் ஒரு தடுமாற்றம் காணப்படுகிறது.
சமீபத்தில், பீஹார் மாநிலம், பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கார்கே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘பிரதமர் மோடியை யாராலும் பதவியில் இருந்து அகற்ற முடியாது...’ என, கோஷம் எழுப்பினார்.
இதனால் கடுப்பான கார்கே, பிரதமரின் தந்தையை அவமதிக்கும் வகையில், ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த விவகாரம், நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு எதிராக பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவதுாறாக பேசியதாக அவர் மீது வழக்குகள் பாயும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது குறித்து பா.ஜ.,வினர் கூறுகையில், ‘பழுத்த அரசியல்வாதியான கார்கே, நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டாமா; வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவரால் இந்த வயதில் கோர்ட்டுக்கு அலைய முடியுமா...?’ என ஆதங்கப்படுகின்றனர்.
