PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

‘பா.ஜ., கைவிட்டு விட்டது போலிருக்கிறது; அதனால் தான் ஜால்ரா தட்டுகிறார்...’ என, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி., சசி தரூர் குறித்து, அக்கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையில் உயரதிகாரியாக பணியாற்றிய சசி தரூர், கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சசி தரூரை அரசியலுக்கு அழைத்து வந்து, அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் தந்தார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்.பி.,யான சசி தரூர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மத்திய பா.ஜ., அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார்; பிரதமர் மோடியையும் பாராட்டி பேசினார்.
இது, காங்கிரஸ் கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. ‘சசி தரூர் பா.ஜ.,வில் சேர்ந்து மத்திய அமைச்சராக போகிறார். அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்...’ என, காங்., நிர்வாகிகள் கொந்தளித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர், ‘காங்கிரஸ் எம்.பி., ராகுலை தோல்வியடைந்த நபர் என, பா.ஜ.,வினர் அடிக்கடி விமர்சிக்கின்றனர். ஆனால், சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டங்கள், ஏராளமான இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன...’ என்றார்.
இதை கேட்ட காங்., பிரமுகர்கள், ‘சசி தரூர் எதிர்பார்த்ததை பா.ஜ.,வினர் செய்து தரவில்லை என தெரிகிறது. அதனால் தான், பா.ஜ., புகழ் பாடுவதை தவிர்த்து, திடீரென ராகுலுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கியுள்ளார்...’ என்கின்றனர்.
