PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

‘கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் சதி செய்கின்றனர். இது புரியாமல் கூட்டணி கட்சியினர் நம் மீது பாய்வது ஏன்...?’ என புலம்புகிறார், மஹாராஷ்டிர மாநில முதல்வரான பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ்.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார்.
கடந்த 2024 டிசம்பரில், தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். அதற்கு முன், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். அவருக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது.
அப்போது, மஹாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரமாக இருந்தது. இந்த போராட்டத்தை, மனோஜ் ஜராங்கே என்பவர் தலைமையேற்று நடத்தினார். இவர் சமீபத்தில், ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில், போராட்டத்தை பலவீனப்படுத்த, ஏக்நாத் ஷிண்டேவிடம் 500 கோடி ரூபாயை பா.ஜ., வழங்கியதாக ஒரு பெண் பேசியுள்ளார்.
இந்த விவகாரம், மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முதல்வர் பதவி கிடைக்காததால், தேவேந்திர பட்னவிஸ் மீது ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, இந்த ஆடியோ வெளியானதன் பின்னணியில் பட்னவிஸ் உள்ளாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.,வினரோ, ‘எதிர்க்கட்சிகள் விரித்த வலையில் ஏக்நாத் ஷிண்டே சிக்கி விடுவார் போலிருக்கிறது...’ என கவலைப்படுகின்றனர்.
