PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

'சீர்திருத்தம், பொருளாதார வளர்ச்சி என, நேர்மை யான அரசியல்வாதி போல் பேசி வந்த இவரும், இப்படி இலவச கலாசாரத்தில் சிக்கி விட்டாரே...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து கவலைப் படுகின்றனர், அங்குள்ள பொருளாதார நிபுணர்கள்.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்தவர் தான், சந்திரபாபு நாயுடு.
தகவல் தொழில் நுட்பம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டிய இவர், ஓட்டுக்காக இலவசங்கள் வழங்கும் கலாசாரத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
'மக்களுக்கு இலவசங்களை கொடுத்து தான் ஓட்டு வாங்க வேண்டுமா... நல்ல திட்டங்களை நிறைவேற்றினால், மக்களே முன் வந்து ஓட்டளிப்பர்...' என, சந்திரபாபு நாயுடு பேசி வந்தார்.
ஆனால், சமீப காலமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது. 'அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு சலுகைகள் வழங்கப்படும்...' என அறிவித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்தில், 'ஸ்திரீ சக்தி' என்ற பெயரில், பெண்களுக்கான இலவச பஸ் சேவை திட்டத்தையும் துவக்கி வைத்துள்ளார்.
இதை பார்க்கும் சக அரசியல்வாதிகள், 'இலவசங்கள் அறிவித்ததற்காக மற்ற அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்த சந்திரபாபு நாயுடுவும், இப்போது அவர்களது வழிக்கு மாறி விட்டாரே... சீர்திருத்தத்தை விட பதவி முக்கியமல்லவா...' என, கிண்டல் அடிக்கின்றனர்.