PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

'என்னாச்சு இவருக்கு...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு பற்றி ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
சந்திரபாபு நாயுடு, புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பவர். ஆனால், சமீபகாலமாக இவரது நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது.
சமீபத்தில், ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், 'மக்கள் தொகை குறைவது, நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது அல்ல. கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென்கொரியாவில் மக்கள் தொகை மிகவும் குறைந்து விட்டது.
'குழந்தைகளை பெற்று, நாம் சம்பாதிப்பதை, அவர்களுக்கு ஏன் செலவிட வேண்டும் என்ற போக்கு தற்போதைய இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து விட்டது. நாம் சம்பாதிப்பதை, நாமே அனுபவிக்க வேண்டும் என நினைக்கின்றனர். இது தவறான கண்ணோட்டம்.
'ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், இன்னும் சில ஆண்டுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து விடும். இது, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்...' என, நீண்ட உரையாற்றினார்.
இதைக் கேட்ட ஆந்திர மக்கள், 'புதுமை விரும்பியான சந்திரபாபு நாயுடு, இப்போது பழமைவாதியாக மாறி விட்டாரே...' என, ஆச்சரியப்படுகின்றனர்.