/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கிடங்கில் வேலைக்குப் போகத் தயாராகும் ரோபோ
/
கிடங்கில் வேலைக்குப் போகத் தயாராகும் ரோபோ
PUBLISHED ON : ஜன 15, 2026 08:30 AM

பல்டியடித்து, நடனமாடி, இணையத்தில் வைரலான காலத்தைத் தாண்டிவிட்டது 'அட்லஸ்' மனித உருவ ரோபோ. அடுத்து தொழிற்சாலை, சரக்குக் கிடங்கு போன்றவற்றில் வேலை செய்ய அது தயாராகிவிட்டது. பல ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் முன்மாதிரிகளுக்குப் பிறகு, அட்லஸின் வணிக ரீதியான பதிப்பை அதன் தயாரிப்பாளர்கள் செய்யத் தயாராகிவிட்டனர்.
சராசரி மனித உயரமும், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திறனும் கொண்ட அட்லஸ், நெருக்கடியான இடங்களில், இடிக்காமல் சுயமாக நகர்வதுடன், குறைந்தபட்ச மனித மேற்பார்வையிலேயே பணிகளை செய்யும் திறனைப் பெற்றிருக்கிறது. எந்திரன் படத்தில் வரும் ரோபோ போல, தலையை 360 டிகிரி சுற்றுவது மட்டுமில்லாமல், கால்கள், கைகள், இடுப்பு என்று சகல பாகங்களும் விசுக்கென்று எதிர்த் திசைக்குத் திரும்பும் வித்தை அட்லசுக்கு அத்துபடி. முழுக்க மின்சாரத்தில் இயங்கும் அதன் மோட்டார்களும் ஏ.ஐ., சில்லுகளும் இந்த லாகவத் திறனை அட்லசுக்குத் தந்துள்ள ன என்கின்றனர் இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள சில தொழிற்சாலைகளில் 2028 முதல் அட்லஸ் ரோபோக்கள் வேலைக்குப் போகப்போகின்றன. ஆரம்பத்தில் பொருட்களைக் கையாளுதல் மற்றும் உதிரி பாகங்களை எடுத்து வகை வாரியாக அடுக்குதல் போன்ற வேலைகளுக்கு இவை பயன்படுத்தப்படும். பின்னர் வாகன ஆலைகளின், 'அசெம்பிளி லைன்'களிலும் சேர்க்கப்படும். ஆண்டுக்கு 30,000 ரோபோக்களை உற்பத்தி செய்ய அதன் தயாரிப்பாளர்கள் இலக்கு வைத்துள்ளனர். ஆலைகளில், சலிப்பூட்டும் மற்றும் அபாயகரமான பணிகளில் மனிதப் பணியாளர்களுக்கு ஒத்தாசையாக இந்த ரோபோக்கள் வேலை செய்யப் போகின்றன.

