PUBLISHED ON : ஜூலை 17, 2026 01:37 AM

'எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என நினைத்தால், அதற்கும் முட்டுக்கட்டை வருகிறதே...' என கவலைப்படுகிறார், கோவா மாநில காங்கிரஸ் தலைவரான கிரீஷ் ஷோடங்கர்.
கோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 15 ஆண்டு களாகவே, பா.ஜ., தான் ஆளும் கட்சியாக உள்ளது. எவ்வளவோ முயன்றும் காங்கிரசால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
அடுத்தாண்டு துவக்கத்தில், கோவாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெற, காங்கிரசார் தற்போதே தயாராகி வருகின்றனர். இதற்காக, தமிழக காங்., மேலிட பொறுப்பாளராக இருந்த கிரீஷ் ஷோடங்கர், கோவா மாநில காங்., தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
'மக்களிடையே ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. இதை வைத்து பிரசாரம் செய்து, ஆட்சியை பிடித்து விடலாம்...' என, மேலிட தலைவர்களிடம் நம்பிக்கை தெரிவித்திருந்தார், கிரீஷ் ஷோடங்கர்.
இந்நிலையில், காங்., கட்சியைச் சேர்ந்த சிலர் சமீபத்தில், 'கோவா காங்கிரஸ்' என்ற தனி கட்சியை துவக்கியுள்ளனர். இதனால், கிரீஷ் ஷோடங்கர் மட்டுமல்லாமல், காங்., மேலிட தலைவர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.
'எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத சிலர், வேண்டு மென்றே குழப்பத்தை ஏற்படுத்த, இது போன்ற சதி செயல்களில் ஈடுபடுகின்றனர்...' என, கிரீஷ் ஷோடங்கர் புலம்புகிறார்.
