PUBLISHED ON : ஜூலை 16, 2026 02:20 AM

'அடுத்த தலைவர் உருவாகி விட்டார் போலிருக்கிறது...' என்கின்றனர் குஜராத் மாநில மக்கள்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த 28 ஆண்டுகளாக பா.ஜ., தான் இங்கு ஆளும் கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேடிக் கண்டு பிடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2001 முதல் 2014 வரை, நரேந்திர மோடி தான் குஜராத் முதல்வராக இருந்தார். அவரது சிறந்த நிர்வாகத்தால், நாடு முழுதும் பிரபலமான தலைவராக உருவெடுத்தார்.
குஜராத்தில் பா.ஜ., தொடர்ந்து ஆதிக்கம்செலுத்தி வந்தாலும், மோடிக்குப் பின் மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் யாரும் இங்கு உருவாகவில்லை என்ற கவலை, அந்த கட்சியினரிடையே இருந்து வருகிறது.
இந்நிலையில் தான், தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கும் ஹர்ஷ் சங்கவி, மக்களின் செல்வாக்கைப் பெற்று வருவதுடன், பா.ஜ., மேலிடத்திலும் நல்ல பெயர் எடுத்து வருகிறார்.
குஜராத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஹர்ஷ் சங்கவி அனுப்பி வைக்கப்படுகிறார். அவர், இரு தரப்பினரையும் அழைத்து பேசி, சுமுக முடிவை ஏற் படுத்தி, அனைவரது பாராட்டையும் பெற்று விடுகிறார்.
இதை பார்த்து, 'அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலுக்கு, இப்போதே முதல்வர் வேட்பாளரை தயார்படுத்தி வருகிறது பா.ஜ., மேலிடம்...' என்கின்றனர் குஜராத் மக்கள்.
