PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:40 AM

'பதவி எவ்வளவு முக்கியம் என்பது இப்போது தான் தெரிகிறது...' என கவலைப்படுகிறார், காங்., கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வராக இருந்த சித்தராமையா, கடந்த மாதம் தான், தன் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுத்தார். ஆனால், பதவி இல்லாத இந்த ஒரு மாதத்துக்குள்ளேயே, அவருக்கு சில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.
சமீபத்தில், பெங்களூரில் உள்ள மாநில தலைமை செயலகத்துக்கு காரில் வந்தார் சித்தராமையா. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கான வாயிலுக்குள் அவரது கார் நுழைய முயன்றது. காருக்குள் சித்தராமையா இருப்பது தெரியாமல், அங்கிருந்த போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த சித்தராமையா, கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியில் தலையை நீட்டினார். சுதாரித்த போலீசார், அவரது காரை உள்ளே அனுமதித்தனர்.
சித்தராமையா ஆதரவாளர்களோ, 'முதல்வராக இருந்தபோது, சித்தராமையாவுக்கு போலீசார் சல்யூட் அடித்தபடி காரை அனுமதித்தனர். இப்போது, முன் பின் தெரியாதவரை தடுத்து நிறுத்துவது போல் நிறுத்தி விட்டனரே... எல்லாம் நேரம் தான்!' என புலம்புகின்றனர்.
