PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

'மக்கள் முன், மானத்தை வாங்குகின்றனரே...' என கவலைப்படுகிறார், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான அஸ்வினி வைஷ்ணவ்.
ராஜஸ்தானில், முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் சொந்த மாநிலம் இது தான்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று, 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுவதற்காக, சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பா.ஜ., சார்பில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக அஸ்வினி வைஷ்ணவ், ராஜஸ்தான் மின் துறை அமைச்சரும், அம்மாநில பா.ஜ., மூத்த தலைவருமான ஹீரா லால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களிலேயே, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தாலும், அதன்பின் தொடர்ந்து மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின் துறை அமைச்சர் ஹீரா லால் தர்மசங்கடத்தில் நெளிந்தார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவோ, கோபத்தை வெளியில் காட்டாமல் அமர்ந்திருந்தார். ஒரு வழியாக நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
மின் துறை அமைச்சர் ஹீரா லாலை அழைத்த அஸ்வினி வைஷ்ணவின் ஆதரவாளர்கள், 'மத்திய அரசின் பெருமையை மக்களுக்கு எடுத்து கூறும் நிகழ்ச்சியில், இப்படியா மின்சாரத்தை துண்டிப்பது; என்ன நிர்வாகம் நடத்துகிறீர்கள்...' என திட்டியபடியே அங்கிருந்து கிளம்பினர்.
