PUBLISHED ON : ஜூன் 25, 2026 12:35 AM

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இவருக்கு தான் பொருந்தும்...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பார்த்து கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள தெலுங்கு தேசம் கட்சியினர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும், அவரது அரசையும் சரமாரியாக குற்றம்சாட்டினார்.
'ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். சட்டசபையில் என்னையும், என் கட்சியினரையும் பேச அனுமதிப்பது இல்லை. சட்டசபைக்கு உள்ளே தான் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது என்றால், சட்டசபைக்கு வெளியிலும் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.
'எங்கள் கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் அனைத்தையும் ஆந்திர அரசு முடக்கி வைத்துள்ளது. அரசு செய்யும் முறைகேடுகள், தவறுகள் வெளியில் தெரியக்கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாக உள்ளனர்...' என்றார்.
தெலுங்கு தேசம் கட்சியினரோ, 'சமூக வலைதள பக்கங்களை மாநில அரசு, தன் விருப்பத்துக்கு ஏற்ப முடக்க முடியாது. விதிமுறைகளை மீறி செயல்பட்டு, அதற்கான ஆதாரங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனமே முடக்கி விடும். இந்த விஷயத்தில் எங்கள் மீது குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
