PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:29 AM

'இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு எங்கள் தலைவர் பாடம் புகட்டுவார்...' என, நம்பிக்கையுடன் கூறுகின்றனர், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் நிர்வாகிகள்.
பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். கடந்த காலங்களில், பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து, அவர்களை ஆட்சியில் அமர வைத்தார்.
மற்றவர்களை ஆட்சியில் அமர வைப்பதற்கு பதிலாக, நாமே ஆட்சியில் அமர்ந்து விடலாம் என விபரீத முடிவு எடுத்து, 2024ல் பீஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கினார் பிரசாந்த்.
இதையடுத்து, 2025ல் பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், அங்குள்ள 238 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால், ஒரு தொகுதியில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.
பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. பா.ஜ., தலைவர்கள் திட்டமிட்டு தன் கட்சியை தோற்கடித்து விட்டதாக பிரசாந்த் புலம்பினார்.
இந்நிலையில், பீஹாரின் பாங்கிபூர் தொகுதிக்கு, வரும் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில், தன் கட்சி சார்பில் தானே களமிறங்கி, பா.ஜ.,வை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளார் பிரசாந்த்.
பா.ஜ.,வினரோ, 'எத்தனை முறை மண்ணை கவ்வினாலும், இவர் திருந்த மாட்டார் போலிருக்கிறதே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
