PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM

'பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கை பிடித்த கதையாக இருக்கிறதே...' என, தனக்குத் தானே புலம்புகிறார், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலர் பினோய் விஸ்வம்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
'இடதுசாரி கட்சியினர், மதச்சார்பற்றவர்கள் என தங்களை அடையாளப்படுத்தினாலும், சிறுபான்மையினர் விஷயத்தில் தாஜா அரசியல் செய்வதில் கெட்டிக்காரர்கள்...' என, பா.ஜ.,வினர் கிண்டல் அடிப்பது வழக்கம். இந்த தாஜா அரசியலால், இப்போது பினோய் விஸ்வத்துக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய விஸ்வம், சமூக வலைதளத்தில், 'முஸ்லிம்சகோதரர்களுக்கு பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துகள்...' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. 'ரம்ஜான் பண்டிகை எது,பக்ரீத் பண்டிகை எது என்ற வித்தியாசம்கூட தெரியாத ஒருவர், எப்படி முக்கியமான அரசியல் கட்சியின் செயலராக இருக்கிறார்...' என, பலரும் கிண்டல் அடித்தனர்.
'யாரிடமும் ஆலோசிக்காமல், ஆர்வக்கோளாறில் விஸ்வம் இப்படி செய்துவிட்டு, இப்போது விழிபிதுங்கி நிற்கிறார், பாவம்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

