
'எப்படியாவது மறுபடியும் மத்திய அமைச்சராகி விட வேண்டும் என முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பர்ேஷாத்தம் ரூபாலாவைப் பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
பர்ேஷாத்தம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், 2016ல் இருந்து, 2024 வரை தொடர்ந்து அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த, 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'வட மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன்னர்களாக இருந்தபோது, மொகலாயர்களுக்கும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்' என, பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, லோக்சபா தேர்தலில் மீண்டும், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதும், பர்ேஷாத்தமுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.
இதனால் குஜராத்துக்குள்ளேயே முடங்கி கிடந்தார். தற்போது சொந்தமாக, 'யு டியூப்' சேனலை துவக்கியுள்ளார். அதில், குஜராத் கலாசார பெருமைகளை விளக்கி பதிவுகளை வெளியிட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவரது பதிவுகளுக்கு, சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனினும், 'பழைய விஷயங்களை ராஜபுத்திர சமூகத்தினர் மறந்திருந்தால் மட்டுமே பர்ேஷாத்தமுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும். இல்லையெனில், இவரது கனவு, பகல் கனவாகி விடும்...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.

