PUBLISHED ON : ஜன 27, 2026 01:01 AM

'ஒரு பிரச்னை எடுபடவில்லை என்றால், அடுத்த விஷயத்துக்கு தாவி விட வேண்டும். இது கூட நம் தலைவருக்கு தெரியவில்லையே...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பற்றி, கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு சாதகமாக செயல்படுவதாக, தேர்தல் ஆணையத்தின் மீது, ராகுல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில், தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுக்கு சாதகமாக செயல்பட்டதால் தான், அங்கு காங்கிரஸ் தோல்வி அடைந்தது என, ராகுல் சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டினார்.
அதற்கு பின், 'பல மாநிலங்களில் ஒரே வீட்டில், 100க்கும் அதிகமான ஓட்டுகள் இருப்பது எப்படி... இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது எப்படி?' என, பல கேள்விகளை எழுப்பினார் ராகுல்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை; ராகுலின் புகார் பற்றி மக்களும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல், 'குஜராத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில், ஆளும் பா.ஜ.,வுடன் சேர்ந்து, தேர்தல் ஆணையம் மோசடியில் ஈடுபடுகிறது.
'காங்கிரசுக்கு ஆதரவானவர்களின் ஓட்டுகள் மொத்தமாக நீக்கப்படுகின்றன. காங்கிரசுக்கு ஆதரவு அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகளில் முறைகேடுகள் அரங்கேறுகின்றன...' என்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'ராகுல், அரைத்த மாவையே அரைக்கிறாரே...' என, புலம்புகின்றனர்.

