PUBLISHED ON : ஜன 26, 2026 01:46 AM

'எப்போது நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிகழ்வு, விரைவில் நடந்து விடும் போலிருக்கிறது...' என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், கேரள மாநில காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் எதிர்ப்பாளர்கள்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் எம்.பி.,யான சசி தரூர், கட்சி மேலிடத்துக்கு எதிராக செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, அவரது அதிருப்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், அம்மாநிலத்தின் கொச்சி நகரில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் பேசிய ராகுல், மேடையில் இருந்த காங்., நிர்வாகிகளின் அனைவரது பெயரையும் குறிப்பிட்ட நிலையில், சசி தரூரின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த சசி தரூர், கட்சி மேலிடமும், கேரள காங்., நிர்வாகிகளும் தன்னை அவமதிப்பதாக, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டார்.
இதற்கிடையே, கேரள சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்க வரும்படி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்து விட்டார்.
இதையடுத்து, 'சசி தரூர் எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்...' என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

