PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM

'உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா...' என, காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர், பீஹார் மாநில பா.ஜ.,வினர்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தாராளமாக, 'இலவசங்கள்' குறித்த வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன.
ஆளும், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., அடங்கிய, தே.ஜ., கூட்டணி சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
பீஹாரில் உள்ள பெண்கள் சுய தொழில் துவங்கும் வகையில், 75 லட்சம் பெண்களுக்கு, தலா, 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்த திட்டம், எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
'பா.ஜ.,வினருக்கு ஓட்டுகளே முக்கியம். ஓட்டு வாங்குவதற்காக தேர்தல் நேரத்தில் இந்த நிதி உதவி திட்டத்தை அறிவித்துள்ளனர்...'என, விமர்சித்தார், பிரியங்கா.
பா.ஜ.,வினரோ, 'கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா அரசு, பெண்களுக்கு சலுகை அளிக்கும் பல திட்டங்களை அறிவித்ததே; அப்போது பிரியங்கா, ஓட்டு வங்கி குறித்து பேசாதது ஏன்... எங்களுக்கு ஒரு நியாயம்; உங்களுக்கு ஒரு நியாயமா...' என, கொந்தளிக்கின்றனர்.