PUBLISHED ON : ஆக 29, 2026 01:17 AM

'வாய் தவறி பேசுவதை எல்லாம் பெரிய விஷயமாக்கினால், இப்படித் தான் நடக்கும்...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் குறித்து கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள பா.ஜ.,வினர்.
பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், ஆளும் கூட்டணி கட்சியினர் பேசும் விஷயங்களை கிண்டலடித்து, சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.
மாநில தொழில் துறை அமைச்சரான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்ரேயாஜி சிங், சமீபத்தில் மஹாத்மா காந்தியை புகழ்ந்து பேசும்போது, 'ராஷ்ட்ர பிதா' என கூறுவதற்கு பதிலாக, 'ராஷ்ட்ரபதி' என கூறி விட்டார்.
'ராஷ்ட்ர பிதா' என்ற ஹிந்தி வார்த்தைக்கு, 'தேசப்பிதா' என அர்த்தம். 'ராஷ்ட்ரபதி' என்றால், 'ஜனாதிபதி' என்று அர்த்தம். இதை வைத்து, 'தேசப்பிதா யார் என்றே தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராக உள்ளனர்...' என, தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்திருந்தார்.
சில நாட்களுக்கு பின், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், பீஹாரின் கயா மாவட்டத்தில், மலையை வெட்டி பாதை அமைத்து பிரபலமான தஷ்ரத் மஞ்சி பற்றி குறிப்பிடுவதற்கு பதிலாக, பீஹார் முன்னாள் முதல்வரான ஜிதன்ராம் மஞ்சி பெயரை வாய் தவறி குறிப்பிட்டு விட்டார்.
தேஜஸ்வி யாதவின் இந்த உளறலை, 'உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' என கேட்பது போல, பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர்.
