PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

'தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்குமோ...' என்ற பீதியில் உறைந்துள்ளனர், மஹாராஷ்டிர மாநில அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. விரைவில்சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஆளும் கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்திக்கவுள்ளன.
தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில், மற்றொரு பக்கம் வன்முறையும் அரங்கேறி வருகிறது.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்; அரசியல் முன்விரோதம்தான் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மும்பையில் மாபியா கும்பல் ஆதிக்கம் உள்ளது.எடுத்ததற்கெல்லாம் துப்பாக்கியைத் துாக்கி சுடும் கலாசாரம் இங்கு அதிகரித்து உள்ளது.
'தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் பழிவாங்கலுக்காக இதுபோன்ற துப்பாக்கி கலாசாரம் மேலும் அதிகரிக்கும்' என கலக்கத்தில் உள்ளனர், அரசியல்வாதிகள்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவோ, 'எல்லா மாநிலத்திலும்நடப்பதுபோல் தான் இங்கும் நடக்கிறது. ஆனால், அரசியல் நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் இதை மிகைப்படுத்தி பேசி, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தப் பார்க்கின்றனர்...' என, புலம்புகிறார்.