/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பா.ஜ., அண்ணாமலைக்கு விரைவில் புது பதவி?
/
பா.ஜ., அண்ணாமலைக்கு விரைவில் புது பதவி?
PUBLISHED ON : ஜன 13, 2026 04:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''எதிர்க்கட்சியினரை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழகம் முழுக்க வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்துச்சே... இப்ப, பட்டியல்ல விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணியில, தி.மு.க.,வினர் தீவிரமா களம் இறங்கி இருக்காங்க... இதுல, கோவை மாநகராட்சி, தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ற விண்ணப்பங்களுக்கு மட்டும் தான் அதிகாரிகள் முக்கியத்துவம் தர்றாங்க பா...
''அதாவது, தங்களது கட்சியைச் சேர்ந்த, தங்களது கூட்டணிக்கு ஓட்டு போடுறவங்க விண்ணப்பங்களை மட்டும் அதிகாரிகளிடம் தி.மு.க., கவுன்சிலர்கள் குடுத்து, திருத்தம் பண்றாங்க... அதே, எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்கள்னு தெரியவந்தா, அவங்களை சேர்க்காம தவிர்த்துடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''திருநங்கையர் தொல்லை அதிகமாகிடுச்சுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், மல்லுார் பக்கத்துல இருக்கிற ஆறாங்கல் திட்டு, பாரப்பட்டி பிரிவு பகுதிகள்ல, ராத்திரி, 7:00 மணிக்கு மேல சில திருநங்கையர் வந்து நிற்கிறாங்க... அந்த வழியா போற வாலிபர்களுக்கு, 'சிக்னல்' குடுத்து அழைக்கிறாங்க...
''இதுல சபலப்படுற சில வாலிபர்களை, பக்கத்துல இருக்கிற புதர்கள், பாறை பகுதிகளுக்கு தனியா கூட்டிட்டு போறாங்க... அங்க, ஏற்கனவே இருக்கும் சில திருநங்கையருடன் சேர்ந்து, வாலிபர்களை மிரட்டி பணம், மோதிரம், மொபைல் போன்களை பறிச்சிட்டு, விரட்டி அடிச்சிடுறாங்க...
''இது பத்தி போலீஸ்ல புகார் குடுத்தா தங்களுக்கு தான் அசிங்கம்கிறதால, பலரும் கமுக்கமா போயிடுறாங்க... இதெல்லாம், மல்லுார் போலீசாருக்கு தெரிஞ்சாலும், புகார் வந்தா பார்த்துக்கலாம்னு அலட்சியமா இருக்காங்க... இந்த நுாதன வழிப்பறியில, கொலை மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டா, நம்ம தலை தான் உருளும்கிறதை மல்லுார் போலீசார் புரிஞ்சுக்காம இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''புது பதவி தரப் போறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, இதுவரை எந்த பதவியும் தரல... இப்ப, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர்றதால, தென் மாநிலங்களுக்கான பொறுப்பாளரா அவரை நியமிக்க, மேலிடம் திட்டமிட்டிருக்கு ஓய்...
''முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவும், முன்னாடி தென் மாநிலங்களுக்கான, பா.ஜ., பொறுப்பாளரா இருந்திருக்கார்... அண்ணாமலைக்கும் அந்த பொறுப்பை குடுத்து, மூணு மாநில சட்டசபை தேர்தல் பணிகளை குடுக்கப் போறாளாம் ஓய்...
''சமீபத்தில், டில்லியில நடந்த தமிழக தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கும், அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்திருந்தா... இதை எல்லாம் பார்த்துட்டு, 'தமிழக தேர்தல் களத்துல, அண்ணாமலை பிரசாரப் பீரங்கியா வலம் வருவார்'னு, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமா சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

