PUBLISHED ON : பிப் 04, 2026 04:46 AM

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேச்சு:
'நம் எதிரி தி.மு.க.,
தான்' என, நாம் கூறி வருகிறோம். அதை மறைத்து, அ.தி.மு.க.,வுக்கு
சக்தியில்லை என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்
முயற்சித்தார். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில், போட்டி கடுமையானவுடன்,
'தி.மு.க., - அ.தி.மு.க., இடையில் தான் போட்டி' என, ஸ்டாலின் பேசுகிறார்.
எனவே, சைடில் வந்த நடிகர்கள், உதிரி கட்சிகள், விமர்சனம் செய்யக்கூடிய
நாலாந்தர அரசியல் கட்சி தலைவர்களை துாக்கி எறிந்து விட்டு, நம் கட்சியினர்
கடுமையாக உழைக்க வேண்டும்; அ.தி.மு.க., வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
கிட்டத்தட்ட, 50 வருஷமா நடக்கிற, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கான போட்டியை,
தி.மு.க., - த.வெ.க.,ன்னு மாற்ற நடிகர் விஜய் துடிக்கிறார்... இவங்க
கொஞ்சம் அசந்துட்டா, இவங்க இடத்தை அவர் தட்டிட்டு போயிடுவாரு!
தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி:
ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு, வரலாறு காணாத வகையில் வாடகை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை விகிதம் அதிகமாக உள்ளது. அதை குறைப்பதற்கு முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
வீடுகளில் குடியிருப்போரும், வணிகர்களும் ஒன்றா...? வணிகர்கள் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கிறப்ப, அதுக்கு ஏற்ப வாடகையை கட்டுறது தானே முறை!
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி:
தே.ஜ., கூட்டணியில், எங்கள் கட்சிக்கு, 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். தொகுதி பங்கீடு தொடர்பாக, இன்னும் ஆலோசனை கூட்டம் நடக்கவில்லை. நாங்கள் என்ன சின்னத்தில் நிற்போம் என்பது குறித்து, எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவு எடுக்கும் .
உங்க கட்சிக்கு தரப் போறது ஒரே ஒரு சீட்... அதுலயும், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் தான் நிற்க சொல்லுவாங்க... அதுக்கு போய் இவ்வளவு, 'பில்டப்' தேவையா?
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேச்சு: ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்பது, தி.மு.க., அரசு தான். 'போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம், அவர்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். ஆசிரியர்கள், 10 கோரிக்கைகளை கூறினால், மூன்று கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும்' என, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனா, கருணாநிதி வழி வந்த உங்க அரசு, இடைநிலை ஆசிரியர்களை, 37 நாட்களாக போராட விட்டது ஏன்?

