PUBLISHED ON : ஏப் 01, 2026 03:14 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில்,
கோவைக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்து உள்ளோம். எனவே, எங்களை எதிர்த்து
யார் போட்டியிட்டாலும் எடுபடாது. கோவை அ.தி.மு.க.,வின் கோட்டை. தி.மு.க.,
மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஐந்து ஆண்டு காலமாக கோவையில் எந்த
திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்
தான், கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள் வரும். கடந்த 2021 சட்டசபை
தேர்தலில், கோவை மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிகளையும் அள்ளிய நீங்க,
இந்த முறை ஆளுங்கட்சியின் பணப் புயலுக்கு மத்தியில் தாக்கு பிடிப்பீங்களா?
கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பேட்டி: கோவை தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் மூன்று முறை வென்றுள்ளன. தி.மு.க., சார்பில் இங்கு போட்டியிட, கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை இறக்குமதி செய்ய வேண்டுமா; இங்கு நல்ல வேட்பாளரே இல்லையா? கோவை தெற்கு தொகுதியில் நான், 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
பட்டிகளில் வாக்காளர்களை அடைத்து வைத்து வித்தை காட்டும் செந்தில் பாலாஜியின் வருகை, இவரை ரொம்பவே கலவரப்படுத்தியிருப்பது நல்லாவே தெரியுது!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி: கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி, 'தி.மு.க.,விடம் தொகுதிகளை கேட்டு வாங்கியதில், காங்., விலை போய் விட்டது' என்று பேசியிருக்கிறார். இதை விட அவமானம், வெட்கக்கேடு, கேவலம், காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. கட்சி தலைமையை பற்றி, எம்.பி., ஒருவர் இவ்வளவு பேசியும், மாநில தலைவர் மீதோ, எம்.பி., மீதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், யாருக்கும் வெட்கமில்லை என்று தான் அர்த்தம்.
காங்., கட்சியில் தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர் என்பது இவருக்கு தெரியாதா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 'பீஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை தான், தமிழகத்தில் பழனிசாமிக்கு நேரிடும்' என, அமைச்சர் சிவசங்கர் சொன்னதை, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பதாகவே கருதுகிறோம். காரணம், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமார், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானது போல், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, பழனிசாமி முதல்வராவதை உறுதிப்படுத்துவதாகவே அவரது பேச்சு இருக்கிறது. அதன்பின் என்ன நடந்தது என்பதல்ல பிரச்னை. எந்த பிரச்னையானாலும், அதை எப்படி எதிர்கொள்வது என்பது பழனிசாமிக்கு நன்கு தெரியும்.
'நிதிஷ் குமாருக்கு அல்வா கொடுத்த மாதிரி, எங்களுக்கு தர முடியாது'ன்னு பா.ஜ.,வுக்கு சவால் விடுறாரோ?

