PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:32 AM

எஸ்.ஆர்.த்ராவிட், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கபத்ரா நதி, தெலுங்கானா மாநிலம் வழியாக பயணித்து, ஆந்திராவில் கிருஷ்ணா நதியுடன் கலக்கிறது.இதனால், துங்கபத்ரா நதி நீரை பங்கிடுவதில், இம்மூன்று மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளன.
இந்நிலையில், கர்நாடகாவின் முனிராபாத்தில் உள்ள துங்கபத்ரா நீர்த்தேக்கத்தில் புதிதாக நிறுவப்பட்ட, 33 நீர் வெளியேற்றும் கதவுகளின் திறப்பு விழாவில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் பாட்டீல் தலைமையில், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா முதல்வர்கள் பங்கேற்று, நதிநீர் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
நீதிமன்றம் போனால் காலதாமதம் ஏற்படுவதுடன், சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கிடையில் பகை உணர்வும், வழக்கறிஞர்களுக்கு மக்கள் வரிப்பணத்தை கோடிக் கணக்கில் வாரிக் கொடுக்கும் நிலையும் ஏற்படும்.
அதற்கு மாறாக, சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண்பது, வரவேற்கப்பட வேண்டிய விஷயம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், காவிரியில் நீர் திறந்து விட, கர்நாடக அரசு முரண்டு பிடித்தது. பொறுத்து பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., ஒருநாள் காரை எடுத்துக்கொண்டு, பெங்களூரில் உள்ள அப்போதைய கர்நாடக முதல்வரான குண்டுராவ் வீட்டிற்கு சென்று விட்டார்.
எம்.ஜி.ஆரை வரவேற்ற குண்டுராவ், அது காலை நேரம் என்பதால், அவருக்கு டிபன் பரிமாறினார். சாப்பிடும் போது எம்.ஜி.ஆருக்கு விக்கல் எடுத்துள்ளது. உடனே, ராவ் தண்ணீர் டம்ளரை எடுத்து, எம்.ஜி.ஆருக்கு கொடுத்துள்ளார். அதை கையில் வாங்கியவர், 'எனக்கு இந்த தண்ணீர் போதாது; காவிரி நீர் தமிழகத்திற்கு வந்தால் தான் என் தாகம் தீரும்' என்றாராம்;
உடனே குண்டு ராவ் காவிரி நீரை திறந்து விட உத்தரவு போட்டாராம்! இது, அக்காலத்தில் பரவலாக பேசப்பட்ட விஷயம்! தற்போது, தமிழகத்திற்கு தலைவலியாக உள்ள மேகதாது விவகாரத்திலும், தமிழக முதல்வர் இதுபோன்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கலாம். முதல் கட்டமாக, தமிழகம் மற்றும் கர்நாடக நீர் பாசன துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபடலாம்; அதன்பின் இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவுக்கு வரலாம்!
எனவே, தமிழக அரசு, கர்நாடக முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, இப்பிரச்னை குறித்து விரிவாக எடுத்துக் கூறி, மேகதாது அணை விவகாரத்தை கைவிட வழி செய்ய வேண்டும்!
பள்ளிகளில் வேண்டாம் அரசியல்!
கே.என்.சந்திரன், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருவாரூர் மாவட்டம், குன்னலுார் ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு அரசு பள்ளிகளில் ஆய்வு செய்வதாகச் சொல்லி, வகுப்பறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர், ஆளுங்கட்சி நிர்வாகிகள்.
அரசு பள்ளிகளில் அரசியல் கட்சியினர் ஆய்வு செய்ய அனுமதியில்லை எனும்போது, இதுபோன்ற செயல் மிகுந்த கவலையை தருகிறது.
கல்வி அமைச்சர், மாவட்ட கலெக்டர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தொகுதியின் சட்டசபை உறுப்பினர், கல்வி அதிகாரிகள் போன்றோர் மட்டுமே எவருடைய அனுமதியும் இன்றி, ஒரு பள்ளியில் திடீரென்று ஆய்வு செய்ய விதிமுறை உண்டு .
மாணவர்களின் கல்வி திறன், பாதுகாப்பு மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகளை, ஆளுங்கட்சி நிர்வாகிகள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், தலைமையாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அதில் திருப்தி ஏற்படவில்லை எனில், முன் அறிவிப்பின்றி, மாவட்ட கல்வி அதிகாரியை ஆய்வு செய்ய வலியுறுத்தலாமே தவிர, தாங்களே ஆய்வு செய்ய புறப்படக் கூடாது.
அப்படியே அவர்கள் ஆய்வு செய்ய நினைத்தால், பொதுப்பணித்துறை, ஆர்.டி.ஓ., அலுவலகம், ரேஷன் கடைகள் போன்ற பொதுமக்கள் நலன் சார்ந்த இடங்களுக்கு சென்று ஆய்வு செய்யலாம்.
உதாரணமாக, மதுரை திருநகர் 7வது ஸ்டாப்பில் உள்ள பாலம், மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு பின் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு, 10 மாதங்களுக்கு பின் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், 15 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த பாலம் சேதமடைந்தும் உள்ளது.
இதுபோன்ற பொதுப்பணித் துறை வேலைகளை தான், கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்யலாமே தவிர, பள்ளிகளில் அல்ல!
மாணவர்களின் கல்விச் சூழலை அரசியலாக்காமல், அவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த ஏதுவான சூழலை உருவாக்குவது, அரசின் கடமை!
மன புழுக்கத்தை சிரிப்பில் மறைக்கும் தி.மு.க.,!
ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கூட்டணி இல்லாமல், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்; அதை பரிசீலிப்போம்' என்று, அக் கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியிருப்பது, 'சீச்சி... இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியின் கதையைப் போல் உள்ளது.
கடந்த 1967 முதல் இன்று வரை ஒரு சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., தனித்து நின்று வென்றதாக சரித்திரமே கிடையாது. 1967-ல் முதல் தேர்தலிலும் கூட சுதந்திரா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான், தன் முதல் வெற்றியை அறுவடை செய்தது, தி.மு.க.,
கடந்த 2006-ல், கூட்டணி கட்சிகள் தயவால், 96 இடங்களை மட்டும் பெற்று, 118 என்ற பெரும்பான்மையை பெறமுடியாமல், காங்., ஒத்துழைப்புடன் மைனாரிட்டி ஆட்சி அமைத்தது, தி.மு.க.,
அதேபோன்று, 2011-ல், '2ஜி' ஊழலால், 23 இடங்களில் மட்டுமே வெற்றி; 2014- பார்லிமென்ட் தேர்தலிலோ கணக்கிலே வராமல் காணாமல் போனது.
கூட்டணி வைத்து போட்டியிட்ட போதே, தி.மு.க.,வின் கடந்த கால வெற்றிகள் இப்படி பல சறுக்கல்களுடன் தான் இருந்துள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு முன், ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக தி.மு.க.,விற்கு பின்பாட்டு பாடிக் கொண்டிருந்த கூட்டணி கட்சியினர் எல்லாம்,தேர்தல் முடிவிற்கு பின், தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டைக்குள் சுகமாக அடைக்கலமாகி விட்டனர்.
இந்நிலையில், தனித்து விடப்பட்டுள்ள தி.மு.க., தனித்து போட்டி என்று கூறுவது, உள்ளத்தின் புழுக்கத்தை, உதட்டு சிரிப்பில் மறைப்பது போல் உள்ளது!
