தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ என்னதான் நினைக்கிறார் பழனிசாமி?

 என்னதான் நினைக்கிறார் பழனிசாமி?

 என்னதான் நினைக்கிறார் பழனிசாமி?


PUBLISHED ON : ஜூன் 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்துக் கட்சி சார்பில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இத்தீர்மானத்தில் தி.மு.க.,வின் கருத்தையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

முதல்வர் விஜயும் அதை ஏற்றுக் கொண்டார். உடனே, 'தமிழக வெற்றிக் கழக அரசின் தீர்மானத்தை தான், அ.தி.மு.க., ஆதரித்ததே தவிர, தி.மு.க.,வின் இடைசெருகல் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை' என்று, அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.

மேலும், 'தி.மு.க.,வின் இடைசெருகல் தீர்மானத்தை சேர்க்க, சபை விதிகளில் இடமில்லை; இது சபையின் விதிக்கு புறம் பானது' என்று கூறி, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இன்று தி.மு.க.,விற்கு எதிராக இவ்வளவு வேகம் காட்டும் பழனிசாமி, த.வெ.க., ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த சமயம், தி.மு.க., ஆதரவுடன் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க போகிறது- என்ற செய்தி வெளியான போது, மறுப்பு தெரிவிக்காததுடன், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 47 பேரை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று, அங்கு ரிசார்ட்டில் தங்க வைத்து, பத்திரிகையாளர்களிடம், 'நல்ல செய்தி விரைவில் வரும்' என்று ஆருடம் அல்லவா கூறினார்!

'நான் தோல்வியை எதிரிக்கு பரிசாக தந்து பழகியவன்' என்று, சினிமாவில் சொன்னபடி, நிஜத்திலும் தி.மு.க.,வுக்கு தோல்வியை பரிசாக தந்தவர், எம்.ஜி.ஆர்.,

இதைத் தான், அ.தி.மு.க., தொண்டர்கள் விரும்புகின்றனர்.

எந்த நிலையிலும் ஆட்சி அமைக்க, தி.மு.க.,வின் ஆதரவைக் கேட்டு, அ.தி.மு.க., செல்லக்கூடாது என்பதுதான் தொண்டர்களின் நிலைப்பாடு.

இதையெல்லாம் மறந்து, தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டம் போட்டார் பழனிசாமி. இன்று நிலைமை என்ன...

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வாக பனையூருக்கு பயணம் செய்கின்றனர்; பழனிசாமியால் இதை தடுக்க முடியவில்லை.

இன்று, மேகதாது அணை விவகாரத்தில், தி.மு.க.,வின் இடைசெருகல் தீர்மானத்தை எதிர்க்கும் பழனிசாமி, அன்று தி.மு.க., ஆதரவோடு, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்ற ஆலோசனையை மட்டும் ஆதரித்தது ஏன்?

----

ஓட்டம் பிடித்த தி.மு.க.,!


ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் எழுப்பியுள்ள கட்சி நிதி விவகாரம், தி.மு.க.,வின் நீண்டகால ஊழல் பின்னணியை, மீண்டும் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக்கியுள்ளது.

ஆதாரங்களைக் கண்டு அஞ்சி, சபையை விட்டு ஓடும், தி.மு.க.,வின் இந்த மடைமாற்ற உத்தி புதிதல்ல; அது அவர் களின் பரம்பரை அரசியல் தந்திரம்!

கடந்த 1970-களில் தி.மு.க., அரசின் முறைகேடுகளை விசாரித்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையிலான ஆணையம், தி.மு.க.,வின் ஊழல் முறைகேடுகளை, 'அறிவியல்பூர்வமான ஊழல்' என்று வர்ணித்தது.

தடயமே இல்லாமல் பொதுப் பணத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என்பதற்கு, தி.மு.க., அன்று வகுத்து கொடுத்த வழிமுறைகள், வரலாற்று பக்கங்களில் அழியாத கறையாக உள்ளன.

அன்று முதல் இன்று வரை, தன் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க, தி.மு.க., அரசு கையாண்ட சில விசித்திரமான காரணங்கள் நகைப்பிற்குரியவை!

மின்சார வாரியத்தின் நிர்வாகத் தோல்விகளையும், நிலக்கரி ஊழல்களையும் மறைக்க, 'அணில்கள் கம்பியில் ஓடுவதால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது' என்றனர்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை மாயமான போது, 'எறும்புகள் சர்க்கரையை தின்றுவிட்டன' என்றனர். அப்படியெனில், சர்க்கரை இருந்த கோணிப்பைகளை எங்கே என்று கேட்டபோது, 'கறையான்கள் அரித்துவிட்டன' என்று, அரசு ஆவணங்களிலேயே கணக்குக் காட்டி தப்பி ஓடினர்.

அதே பாணி தான், மணல் குவாரி கொள்ளைகளிலும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி கூடுதலாக வசூலிக்கப்படும், 10 ரூபாய் மாமூல் கலாசாரத்திலும் தொடர்ந்தது.

ஒவ்வொரு பாட்டிலுக்கும் சட்டவிரோதமாகப் பெறப்படும் இந்த கூடுதல் பணம், எவருடைய பைகளுக்கு செல்கிறது என்ற கேள்விக்கு, இன்று வரை உதயநிதியிடமோ, தி.மு.க., விடமோ பதில் இல்லை.

அறிவியல் பூர்வமாக ஊழல் செய்து பழகியவர்களுக்கு, சட்டசபையில் மக்கள் எழுப்பும் நேர்மையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. அதனால்தான், எறும்புகளையும், அணில்களையும் சாக்காக காட்டியவர்கள், இன்று, சபாநாயகர் பேச வாய்ப்பளித்தும் பதில் சொல்ல முடியாமல் சபையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்!

-----

புத்தகம் படித்தால் எதிர்நீச்சல் போடலாம்!


மரகதம் சிம்மன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, நன்னெறி புத்தகங்களை பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.

பாட இடைவேளையின் போது, மாணவர்கள் இப்புத்தகங்களை படிக்க செய்ய வேண்டுமென்று, கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது!

தற்கால இளம் தலைமுறையினர் புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில், அவர்களுக்கு மொபைல் போனிலேயே எல்லாம் கிடைத்து விடுவதால், எதற்கு செய்தித்தாள், புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஒரு நல்ல புத்தகம், நுாறு ஆசிரியர்களுக்கு சமம். வாசிப்பு பழக்கம், பல மனக் குழப்பங்களுக்கு விடை தரும்; வாழ்வில் எதிர் நீச்சல் போட கற்றுத் தரும்.

எனவே, இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது, ஆசிரியர்களின் கடமை!

வாசிப்பு பயிற்சிக்கென்று ஒரு வகுப்பு ஒதுக்கப்பட வேண்டும். நீதிபோதனை கதைகள், புராண இதிகாசங்கள், இலக்கியங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று நுால்களை கொடுத்து, வரிசையாக ஒவ்வொரு மாணவரையும் வாசிக்கச் செய்ய வேண்டும்.

இதனால், மாணவர்களிடம் வாசிப்பு திறனுடன், தமிழ் உச்சரிப்பு திறனும் மேம்படும்; கற்பனை வளமும், எழுதும் ஆசையும் தோன்றும்!

கூடவே, செய்தித்தாள்களை தினமும் வாசிக்க செய்ய வேண்டும். இதன் வாயிலாக மாணவர்கள் உலக விஷயங்களை அறிந்து கொள்வர்!

எனவே, நல்லொழுக்கமும், நற்பண்பும் நிறைந்த இளைய சமுதாயம் உருவாக, வாசிப்பு பயிற்சி அவசியம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us