தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ போதையை ஒழித்தால் பிரச்னை தீரும்!

 போதையை ஒழித்தால் பிரச்னை தீரும்!

 போதையை ஒழித்தால் பிரச்னை தீரும்!

1


PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2026 12:00 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

க.ராமசாமி, உயர் நீதிமன்ற நீதிபதி (பணி நிறைவு), சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில், நான் எழுதிய, '100 நாளில் தீர்ப்பு' என்ற நுாலில், சில குற்றங்களுக்கான தண்டனைகளை குறிப்பிட்டுள்ளேன். அப்புத்தகம் உயர் நீதிமன்றத்தால் அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அதில் உள்ள யோசனைப்படி, சில தீர்ப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும், அது போதாது என்றே என் மனம் துடிக்கிறது. காரணம், பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் கொடுமை; பெற்ற மகளுக்கும் அதே கொடுமை. உற்ற உறவுகளிடம் பாலியல் அத்துமீறல்... காலையில் நாளிதழை கையில் எடுக்கவே பயமாக உள்ளது.

இதற்கு என்ன தான் தீர்வு? எப்போது தான் இந்த கொடுமையிலிருந்து பெண் குழந்தைகளுக்கு விடுதலை கிடைக்கும் என மனம் அங்கலாய்க்கிறது!

பச்சிளம் குழந்தைகளும், பள்ளி செல்லும் பிஞ்சுகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்து வீசப்படுவதை கேட்கும் போது, கிழக்கு ஆசிய நாடான மங்கோலியா மன்னன் செங்கிஸ்கான் செய்தது போன்று, பாலியல் குற்றவாளிகளின் கை, கால்களை கயிற்றால் கட்டி, அதை குதிரையின் கால்களில் கட்டி, பொதுமக்கள் முன்னிலையில் இழுபடச் செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது.

தண்டனைகள் கடுமையாக்கப்படாமல், இதுபோன்ற குற்றங்கள் குறையாது.

அதற்கு, கீழ்காணும் சில தண்டனைகளை அளிப்பதாக சட்டம் இயற்றப்பட வேண்டும்...

 கழுமரம் ஏற்றுதல்

 கண்களை பறித்தல்

 உயிருடன் புதைத்தல்

 ஆண் தன்மையை அகற்றுதல்

 விலங்குகளுக்கு உயிரோடு உணவாக்குதல்

 விஞ்ஞான பரிசோதனைக்கு உபயோகப் படுத்துதல்

- இப்படி கொடூரமான தண்டனை அளித்தால் மட்டுமே கொடூரமான செயல்கள் குறையும்!

அத்துடன், பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், அதற்கு, அந்தந்த ஏரியா காவல் அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்; இளைஞர்களை ஓராண்டாவது கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்ப வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போதைப் பொருள் எந்த வடிவத்திலும் நாட்டிற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும்.

சில தீர்ப்புகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டால், கொடூரமான குற்றங்கள் குறையும்; பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வடிக்கும் ரத்தக்கண்ணீருக்கு விடிவு கிடைக்கும்!

-----

வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்!



எஸ்.ஏ.ஸ்ரீனிவாச சர்மா, ைஹதராபாத், தெலுங்கானாவில் இருந்து அனுப்பிய, ' இ - மெயில்' கடிதம்: தெலுங்கானா மாநிலத்தில், 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'வுக்கு சொந்தமான நிலத்தை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அரசு, சமீபத்தில் ஏலம் விட்டது. இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது, அந்த வங்கி.

இதனால் கடுப்பான ரேவந்த் ரெட்டி, வங்கியுடனான அனைத்து வணிக உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்து உள்ளார்.

கடந்த, 1976ல் எமர்ஜென்சி காலத்தில், அரசியல் செல்வாக்கு பெற்றோருக்கு, எந்த வித நிபந்தனையும் இன்றி, வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு, வங்கிகளை நிர்பந்தித்தது.

ஆனால், 'விதிகளை மீறி கடன் வழங்க முடியாது' என்று மறுத்து விட்டார், பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஆர்.கே.தல்வார்.

இதனால், இந்திராவின் மகன் சஞ்சயின் கோபத்துக்கு ஆளான தல்வார், பலவாறாக மிரட்டப்பட்டார்; நிதியமைச்சகம் அவரை தொடர்பு கொண்டு, 'பெரிய இடத்து விவகாரம் எதற்கு... கொஞ்சம் பணிந்து போங்கள்...' என்று கேட்டுக் கொண்டது. ஆனாலும், 'வங்கி சட்டவிதிகளை எவருக்காவும் தளர்த்த மாட்டேன்' என்று பிடிவாதமாக கூறிவிட்டார், தல்வார்.

இதனால், அவரை பதவி நீக்கம் செய்ய நினைத்தது காங்., அரசு. அதற்கு, வங்கிக்கான சட்டத்தில் இடமில்லாத நிலையில், எமர்ஜென்சியில் எதிர்க்கட்சியினர் எல்லாம் சிறையில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி, எஸ்.பி.ஐ., சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தம் கொண்டு வந்து, அவரை பதவியில் இருந்து நீக்கினார், இந்திரா.

இப்போது, தெலுங்கானா அரசு மீது, எஸ்.பி.ஐ., வழக்கு தொடுத்ததால், 'வணிக உறவுகளை முறித்துக் கொள்வேன்' என்று மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார், ரேவந்த் ரெட்டி.

நம் நாட்டின் பொருளாதாரம், தொழில் உற்பத்தி மற்றும் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

உலக அளவில் நம் வங்கிகள் மிகவும் வலுவான நிலையில் உள்ளன; பல்வேறு காலக்கட்டங்களில் நம் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளவும், நிலைத்திருக்கவும் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் இந்நடவடிக்கை, வங்கிக்கு மட்டுமல்ல, மாநில வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.

தெலுங்கானாவை போன்று மற்ற மாநிலங்களும் செயல்படத் தொடங்கினால், அது, நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை, ரேவந்த் ரெட்டி போன்ற அரசியல்வாதிகள் மனதில் கொள்ள வேண்டும்!

-------

'பார்ட்டி பண்டு'க்கு பதில் என்ன?


கே.ஆர். ஜி.ஸ்ரீராமன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்புகிறது; கவர்னரும் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார். அதனால், த.வெ.க., அரசு தயாரித்து கொடுத்த உரையில், ஒரு வார்த்தையை கூட கூட்டவோ, குறைக்கவோ இல்லாமல் முழுமையாக வாசித்து விட்டார், கவர்னர்.

இதை எதிர்பாராத எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது, த.வெ.க., அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அவர் பேசுவதை முதல்வரும், அமைச்சர்களும், சட்டசபை உறுப்பினர்களும் அமைதியாக செவிமடுத்தனர்.

மறுநாள் எதிர்க்கட்சியினர் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறிய முதல்வர், 'தமிழக மக்களின் நலன் கருதி, மத்திய அரசுடன் இணக்கமாகவே செல்வோம்' என்றதுடன், டாஸ்மாக் வருமானத்தில் தி.மு.க.,வினரின், 'பார்ட்டி பண்டு' குறித்து பேசியதும், வெலவெலத்துப் போன தி.மு.க.,வினர், சட்டசபையை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டும் போது இருந்த வீரம், அதற்கான பதிலை கேட்க முடியாமல் போனது ஏன்?

மடியில் கனம் இல்லை என்றால், 'பார்ட்டி பண்டு' குறித்து தி.மு.க.,வினர் பதில் அளித்திருக்கலாமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us