PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

'அரசியல் ரீதியான முக்கிய பிரச்னைகளில் கட்சி நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது சகஜம் தான். ஆனால், சின்ன சின்ன பிரச்னைகளில் கூட கருத்து வேறுபாடு எழுந்தால், எப்படி கட்சி நடத்துவது...' என, கவலை தெரிவிக்கின்றனர், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பாகிஸ்தானுக்கு எதிரான , 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் விமர்சித்த நிலையில், அந்த கட்சியின் எம்.பி., சசி தரூர், மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்; இது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால், யாரும் பெரிது படுத்தவில்லை.
ஆனால், டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்த ரவு பிறப்பித்தது. இதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்களும், கட்சியின் மேலிட தலைவர்களுமான ராகுல், பிரியங்கா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'வாயில்லா ஜீவன்கள் எங்கு போகும்...' என, ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அதே நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 'தெரு நாய்களை நகரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்...' என்றும் குரல் எழுப்பினார்.
காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'எல்லா விஷயத்திலுமே நம் கட்சியில் இரட்டை நிலைப்பாடு இருந்தால் என்ன செய்வது...?' என, புலம்புகின்றனர்.